Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு பால் முகவர்கள் கண்டனம்

ஜுன் 03, 2019 11:59

சென்னை: தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நல சங்க மாநில தலைவர் பொன்னுசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, 2014-ம் ஆண்டு பால் உற்பத்தியாளர்களுக்கு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கினார். இது நடந்து 5 ஆண்டுகள் ஆகப்போகிது.

மாட்டுத் தீவனங்கள் மற்றும் இதர செலவீனங்கள் பல மடங்கு உயர்ந்துவிட்டன. பால் உற்பத்தியாளர்களும் பசும் பால் லிட்டருக்கு 35 ரூபாயாகவும், எருமைப் பால் 45 ரூபாயாகவும் உயர்த்தி வழங்க கோரி பல கட்ட கவன ஈர்ப்பு விசயங்களை செய்துவிட்டனர்.

ஆனால் நீங்களோ தேர்தல் கணக்குகளை மனதில் கொண்டு அதனை காதில் வாங்கி கொள்ளாமலேயே கடந்துவிட்டீர்கள். பால் கொள்முதல் விலையை காரணம் காட்டி தனியார் பால் நிறுவனங்கள் 2014-ம் ஆண்டுகளுக்கு பிறகு பல முறை விற்பனை விலையை உயர்த்திவிட்டன. தனியார் பால் நிறுவனங்களின் விற்பனை விலை உயர்வுக்கு மாட்டுத் தீவனங்கள் விலை உயர்வை காரணமாக காட்டி சப்பைக்கட்டு கட்டுகிறார்கள்.

ஆவின் பால் விற்பனையை உயர்த்த தமிழகத்திலேயே பரந்து விரிந்த சந்தை இருக்கையில் அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து ஆவின் நிறுவனத்தின் சக்தியை வீணடிக்கிறீர்கள். அண்டை மாநிலங்களைச் சேர்ந்த அரசு துறை பால் நிறுவனங்கள் எல்லாம் வளர்ச்சியை நோக்கி வீறு நடை போடுகையில் தமிழக அரசின் ஆவின் நிறுவனம் மட்டும் வளர்ச்சி இல்லாமல் இருக்கிறது.

இதற்கு காரணம் என்னவென்பதை நாங்கள் பலமுறை சுட்டிக்காட்டிய பிறகும் கூட அதனை கவனத்தில் கொள்ளாமல் அலட்சியப்படுத்தி வருகிறீர்கள். அண்டை மாநிலங்களைச் சேர்ந்த அரசு துறை பால் நிறுவனங்களைப் போல ஆவின் நிறுவனமும் வளர்ச்சியை நோக்கி வீறு நடை போட தனியார் பால் நிறுவனங்களைப் போல் பால் முகவர்களுக்கு நேரடியாக வர்த்தக தொடர்புகளை வழங்கிட உத்தரவிடுங்கள்.

சுமார் 16 ஆண்டுகளுக்கும் மேலாக உயர்த்தப்படாமல் இருக்கும் ஆவின் பால் விற்பனைக்கான கமி‌ஷனை உயர்த்திட ஆணையிடுங்கள், பிறகு பாருங்கள். ஆவின் நிறுவனம் வளர்ச்சிப் பாதையை நோக்கி நடைபோடுவதை கண்கூடாக காண்பீர்கள்.

உண்மையில் ஆவின் நிறுவனத்தின் மீதும், பால் உற்பத்தியாளர்கள் மீதும் உங்களுக்கு உண்மையான அக்கறை இருக்குமானால் ஆவின் நிறுவனத்தில் உள்ள கருப்பு ஆடுகளை எல்லாம் களை எடுத்து, ஆவின் நிறுவனத்தின் உள்ளே ஊழல் பெருச்சாலிகள் நுழையா வண்ணம் பாதுகாப்பை பலப்படுத்துங்கள். ஆவின் நிறுவனம் படிப்படியாக உயரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்