Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வெளிநாட்டுப் பயணத்தைத் தொடங்குகிறார் மோடி

ஜுன் 04, 2019 08:17

புதிடில்லி: இந்தியாவின் பிரதமராகத் தொடர்ந்து இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ள நரேந்திர மோடி, வரும் 8 மற்றும் 9-ம் தேதிகளில் மாலத்தீவு மற்றும் இலங்கை நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அண்டை நாடுகளுடன் முதல் நல்லுறவுக் கொள்கையின் அடிப்படையில் பிரதமரின் இந்தப் பயணம் அமையும் என்று பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பி.ஜே.பி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, நாடாளுமன்றத் தேர்தலில் 350-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றி இரண்டாவது முறையாக ஆட்சியமையத்துள்ளது. மோடி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றுள்ள சூழலில், நாடாளுமன்ற மக்களவையின் முதல் கூட்டம், வரும் 17-ம் தேதி கூடுகிறது. 

இந்த நிலையில், பிரதமரின் பதவியேற்பு விழாவுக்கு வந்திருந்த இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, இலங்கைக்கு வருமாறு மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார். மேலும், மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலிஹ்ஹும் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதனை ஏற்ற பிரதமர் மோடி, வரும் 8-ம் தேதியன்று மாலத்தீவுக்குச் செல்கிறார். அங்கு, இரண்டு நாள்கள் சுற்றுப்பயணம் செய்யும் பிரதமர், திரும்பும் வழியில் ஜூன் 9-ம் தேதி இலங்கைக்குச் செல்கிறார்.

நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் பி.ஜே.பி வெற்றிபெற்று புதிய அமைச்சரவை பதவியேற்ற பின்னர், பிரதமர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இது. இந்தியா - மாலத்தீவு தலைவர்களிடையே இந்தப் பயணத்தின்போது நடத்தப்படும் பேச்சுகள், இருநாடுகளின் நல்லுறவை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியா வந்திருந்தபோது, மாலத்தீவுக்கு வருமாறு அந்நாட்டு அதிபர் பிரதமருக்கு அழைப்பு விடுத்திருந்தார். 

மாலத்தீவை அடுத்து இலங்கைக்கு வரும் மோடி, அந்நாட்டு அதிபர் மற்றும் பிரதமர் உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்துப் பேச உள்ளார். அண்டை நாடுகளுடனான கொள்கை மற்றும் அணுஆயுதமற்ற நிலையைப் பராமரிப்பது பிரதமர் மோடியின் இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாக இருக்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தலைப்புச்செய்திகள்