Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அரசு பள்ளிகளில் ‘ஏ.சி.’ வசதி: மாணவர்களை கவர புதிய முயற்சி

ஜுன் 04, 2019 09:12

திருப்பூர்: தமிழகத்தில் 2 மாத கால கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டது. இதில் பல்வேறு பள்ளிகளில் மாணவர்களை கவரும் வகையில் பள்ளி ஆசிரியர்கள் மேளதாளம் முழங்க இனிப்பு கொடுத்து வரவேற்றனர்.
 
திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே உள்ள மு.வேலாயுதம் பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி கடந்த 1966-ம் ஆண்டு தொடங்கப்பட்டது ஆகும். கடந்த 2017-ம் ஆண்டு பொன் விழாவை கொண்டாடி உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுப்புறத்தில் உள்ள 4 கிராமங்களை சேர்ந்த 42 மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். 6 ஆசிரியர்கள் வேலை பார்க்கிறார்கள்.

இந்த நிலையில் அதே பகுதியில் 3 தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதனால் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு மாணவர்கள் வருகை குறைந்து விடும் என நினைத்த பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பள்ளியை தரம் உயர்த்த முடிவு செய்தனர்.

அதன்படி வகுப்பறைகளுக்கு குளிர்சாதன வசதி செய்யப்பட்டது. ஸ்மார்ட் வகுப்பறையும் அமைக்கப்பட்டது. நேற்று முதல் இந்த வசதிகளுடன் பள்ளி செயல்பட்டு வருகிறது. மேலும் பஸ் வசதி இல்லாத கிராமத்தில் இருந்து வரும் மாணவர்களை அழைத்து வர பள்ளி ஆசிரியர்கள் சார்பில் காலை மற்றும் மாலை வேளைகளில் ஆட்டோவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் வின்செண்ட் கூறியதாவது-

மு.வேலாயுதம்பாளையம் பகுதிகளில் 3 தனியார் பள்ளிகள் உள்ளது. அதற்கு இணையாக தரம் உயர்த்த முடிவு செய்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வகுப்பறைக்கு குளிர்சாதன வசதி செய்து கொடுத்து ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பள்ளிக்கு வேலாயுதம் பாளையம், நெசவாளர் காலனி, ஒத்தப்பனை, செங்கோடம் பாளையம் பகுதிகளில் இருந்து மாணவ-மாணவிகள் வந்து செல்கிறார்கள்.

நேற்று முதல் நவீன வசதியுடன் வகுப்புகள் தொடங்கி உள்ளது. மேலும் தனியார் பள்ளிக்கு இணையாக கராத்தே, யோகா, ஸ்போக்கன் இங்கிலிஷ் போன்ற பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. இப்பள்ளியில் இருந்து நெசவாளர் காலனி ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த கிராமத்திற்கு பஸ் வசதி கிடையாது. எனவே ஆசிரியர்கள் சார்பில் ஆட்டோ ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

காலையிலும், மாலையும் மாணவர்கள் ஆட்டோவில் அழைத்து வரப்படுகிறார்கள் என அவர் கூறினார்.

கோவை மதுக்கரை குரும்பம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 75 புதிய மாணவர்கள் மேளதாளம் முழங்க பெற்றோருடன் பள்ளிக்கு அழைத்து வரப்பட்டு அவர்களுக்கு ரோஜாப்பூ, பலூன், இனிப்பு வழங்கி வரவேற்றனர். இதேபோல் வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை சேர்ந்த 151 புதிய மாணவர்களுக்கும், 11-ம் வகுப்பில் புதிதாக சேர்ந்த 102 மாணவர்களுக்கும் இனிப்பு, பேனா வழங்கி வரவேற்றனர்.

இதேபோல் வாகராயன் பாளையம் அரசு பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை வரவேற்ற பள்ளி நிர்வாகத்தினர் பள்ளியில் உள்ள கட்டமைப்பு வசதிகளை குறித்து விளக்கினர். மேலும் பல்வேறு பள்ளிகளில் மாணவர்களுக்கு மாலை அணிவித்து மேளதாளம் முழங்க வரவேற்றனர். கோவை செல்வபுரம் வடக்கு மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு மாலை அணிவித்தும், பலூன் வழங்கியும் மேளதாளத்துடன் வரவேற்றனர்.  குளிர்சாதன வசதியுடன் கூடிய வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டது.

தலைப்புச்செய்திகள்