Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அன்னிய செலாவணி மோசடி வழக்கு தொடர்பாக சசிகலாவை விசாரிக்க கேள்விகள் தயாரிப்பு

ஜுன் 05, 2019 10:56

சென்னை:  சசிகலா, அவரது அக்கா மகன் பாஸ்கரன் இருவரும் கடந்த 1996- 97-ம் ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து ஜெ.ஜெ. டி.வி.க்கு எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்கினார்கள்.  

அந்த வகையில் பல கோடி ரூபாய் அன்னிய செலாவணி மோசடி செய்து இருப்பதாக அவர்கள் இருவர் மீதும் புகார் வந்தது. இதையடுத்து அவர்கள் மீது அமலாக்கத்துறையினர் 4 வழக்குகள் பதிவு செய்தனர்.

சென்னை எழும்பூர் முதலாவது பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. முதலில் அமலாக்கத்துறை தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணை முடிந்ததை தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான விசாரணை தொடங்கியது.

கடந்த 2017-ம் ஆண்டு சசிகலா மற்றும் பாஸ்கரன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு சசிகலா வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை. குற்றச்சாட்டு பதிவிலும் கையெழுத்திடவில்லை.

இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் காணொலி காட்சி மூலம் சசிகலா மீது குற்றச்சாட்டு பதிவு செய்து உறுதிப்படுத்தப்பட்டது. பின்னர் நீதிபதி குறுக்கு விசாரணை நடத்துவதற்காக சசிகலாவை நேரில் ஆஜர் படுத்த உத்தரவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சசிகலா சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு சசிகலாவிடம் காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்த உத்தரவிட்டது.

கடந்த மாதம் சசிகலாவிடம் காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் சசிகலா முதலில் காணொலி காட்சியில் ஆஜராகவில்லை. இதற்கிடையே சசிகலாவிடம் கேள்விகள் கேட்க ஏதுவாக வழக்கின் ஆவணங்களை தமிழில் மொழி பெயர்த்து தர கோரிக்கை விடப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட கோர்ட்டு வழக்கு விசாரணையை ஜூலை 26-ந்தேதிக்கு தள்ளி வைத்தது.

இதற்கிடையே நேற்று சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் இந்த வழக்கு நீதிபதி மலர்மதி முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது சசிகலாவுக்கு வழங்க வேண்டிய கேள்வி தொகுப்பு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த கேள்விகளை கொண்டு சசிகலாவிடம் நேரில் விசாரணை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜூலை 16-ந்தேதிக்குள் பதில் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே சசிகலாவிடம் காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தவும் ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

தலைப்புச்செய்திகள்