Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாயமான விமானத்தை தேட அரக்கோணத்தில் இருந்து சென்றது அதிநவீன போர் விமானம்

ஜுன் 06, 2019 09:55

சென்னை: அசாம் மாநிலத்தில் உள்ள ஜோக்ஹாட் விமானப் படை தளத்தில் இருந்து கடந்த திங்கட்கிழமை மதியம் 12.35 மணி அளவில் ஏ.என்.32 ரகத்தை சேர்ந்த போக்குவரத்து பயன்பாட்டிற்கான விமானம் அருணாசலபிரதேசம் மெக்சாவில் உள்ள ராணுவ தளத்துக்கு புறப்பட்டு சென்றது.
 
விமானம் புறப்பட்ட 35 நிமிடத்தில் கட்டுப்பாட்டு அறையில் உள்ள ரேடார் கண்காணிப்பில் இருந்து மறைந்தது. மேலும் கட்டுப்பாட்டு அறையுடன் அந்த விமானத்தின் தகவல் தொடர்பு இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் அதில் பயணம் செய்த 5 பயணிகள் உள்பட 13 பேரின் நிலைமை என்ன ஆனது? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இதைத் தொடர்ந்து மாயமான விமானத்தை தேடும் பணியில் சுகோய்-30, சி-130 ஆகிய 2 விமானப்படை விமானங்கள் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. செயற்கை கோள் மூலமும் தேடுதல் பணி நடக்கிறது. ஆனால் இதுவரை மாயமான விமானத்தை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் அதில் பயணம் செய்தவர்களின் குடும்பத்தினர் தவிப்பில் உள்ளனர்.

இதற்கிடையே மாயமான விமானத்தை தேட இந்திய கடற்படைக்கு சொந்தமான அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமான தளத்தில் இருந்து உலகின் அதிநவீன போர் விமானமான பி.8ஐ விமானம் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது. இந்த விமானம் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. தொடர்ந்து 16 மணி நேரம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலப் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட இந்த விமானம் நேற்று திரும்பி வந்தது.

இந்த தேடுதலில் மாயமான விமானம் பற்றிய ஏதேனும் தகவல் கிடைத்ததா? தடயங்கள் சிக்கியதா? என்பது குறித்து ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமானப்படை தளத்தில் இருந்து தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. மீண்டும் அந்த விமானம் தேடுதலுக்கு புறப்பட்டு செல்லும் என்று தெரிகிறது.

தலைப்புச்செய்திகள்