Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தண்ணீர் பிரச்சனை: சமூக ஆர்வலர் அடித்து கொலை

ஜுன் 06, 2019 10:19

தஞ்சாவூர்: தஞ்சை அருகே உள்ள விளார் வடக்கு காலனியை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 67). இவரது மகன் ஆனந்தபாபு (33). சமூக ஆர்வலர். மேலும் அந்த பகுதியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஆபரேட்டராகவும் இருந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

சம்பவத்தன்று அதே கிராமத்தை சேர்ந்த குமார்(48) மற்றும் அவரது மகன்கள் கோகுல்நாத், கோபிநாத், ஸ்ரீநாத்(16) ஆகியோர் பிளாஸ்டிக் தொட்டியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் உள்ள குழாயில் தண்ணீர் பிடித்தனர். இதை பார்த்த ஆனந்தபாபு தற்போது தண்ணீர் பிரச்சினை இருக்கும் நிலையில் இப்படி தொட்டியில் தண்ணீர் பிடிக்கலாமா? என கூறி அவர்களை தட்டி கேட்டார். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றி ஆத்திரம் அடைந்த குமார் மற்றும் அவரது மகன்கள் சேர்ந்து உருட்டு கட்டையால் ஆனந்தபாபுவை தாக்கினர். அரிவாளால் வெட்டினர். இதை தடுக்க வந்த ஆனந்த்பாபுவின் தந்தை தர்மராஜையும் அவர்கள் தாக்கினர். இந்த கொடூர தாக்குதலில் ஆனந்தபாபு ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். தர்மராஜ் பலத்த காயம் அடைந்தார். உயிருக்கு போராடி கொண்டிருந்த அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று மதியம் ஆனந்தபாபு , அவரது தந்தை தர்மராஜை தாக்கியவர்களை கைது செய்ய கோரி குடும்பத்தினர், உறவினர்கள் மருத்துவ கல்லூரி வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஆனந்தபாபு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். தர்மராஜ் தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆனந்தபாபுவின் உடலை பார்த்து அவரது உறவினர்கள் கதறி அழுதனர். ஆஸ்பத்திரி முன்பு ஏராளமான பொதுமக்கள் திரண்டுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் ஏற்கனவே வழக்கு பதிவு செய்திருந்தனர். தற்போது கொலை வழக்காக மாற்றி வழக்குபதிவு செய்து ஸ்ரீநாத்தை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குமார், கோகுல்நாத், கோபிநாத் ஆகியோர் அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதையொட்டி அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தண்ணீர் பிரச்சினையில் சமூக ஆர்வலர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்புச்செய்திகள்