Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க தமிழ்நாடு முழுவதும் ரூ.400 கோடியில் பணிகள் அதிரடியாக தொடக்கம்

ஜுன் 07, 2019 06:58

சென்னை: பருவ மழை சரிவர பெய்யாததால் தமிழ்நாடு முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாகி விட்டது. ஏரி-குளங்கள் அனைத்தும் வேகமாக வறண்டு விட்டதால் மக்கள் குடிநீருக்காக அவதிப்படுகிறார்கள். குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க தமிழக அரசு ரூ.400 கோடியை ஒதுக்கி உள்ளது. இதன் மூலம் போர்க்கால அடிப்படையில் அதிரடி நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு குடிதண்ணீர் வினியோகம் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு குடிநீர் வாரிய உயர்அதிகாரி கூறிய தகவல்கள் வருமாறு:- தமிழகத்தில் 7.21 கோடி மக்கள் உள்ளனர். இதில் 4.23 கோடி பேருக்கு குடிநீர் வடிகால் வாரியம் மூலமும் 2.98 கோடி பேருக்கு உள்ளாட்சி அமைப்புகள் மூலமும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 2 ஆண்டுகளாக போதிய மழை இல்லாத காரணத்தால் நிலத்தடி நீர் மட்டம் வேகமாக குறைந்து விட்டது. இதனால் கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் தரை மட்டத்தில் இருந்து 20 மீட்டருக்கு கீழே தண்ணீர் சென்று விட்டது. இந்த மாதம் 17.5 மீட்டர் ஆழத்தில் நிலத்தடி நீர் மட்டம் உள்ளது. சில இடங்களில் தண்ணீர் வறண்டும் உள்ளது.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மேட்டூர், பவானிசாகர், அமராவதி, பெரியாறு, வைகை, பாபநாசம், மணிமுத்தாறு, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, கிருஷ்ணகிரி, சாத்தனூர், சோலையாறு பரம்பிக்குளம், ஆழியாறு, திருமூர்த்தி, சிறுவாணி, பில்லூர் ஆகிய அணைகளை நம்பியே வாரியத்தின் 556 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் உள்ளன. இந்த திட்டங்கள் அனைத்தும் நன்றாகவே செயல்பட்டு வருகிறது.

குடிநீருக்கு பயன்படுத்தப்படும் மின்மோட்டார்கள் குழாய்கள் போன்றவைகளை மாற்றி அமைக்க மாநில பேரிடர் நிவாரண நிதி மூலம் ரூ.27 கோடியை தமிழக அரசு வழங்கி உள்ளது. இதன்மூலம் 325 திட்டங்களில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இது தவிர 99 கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் ரூ.244 கோடி மதிப்பில் நடந்து வருகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு பொருத்தப்பட்ட பழைய குழாய்கள் மாற்றியமைக்கும் பணியும் நடைபெறுகிறது.

குடிநீர் வினியோகத்தை மேலும் அதிகரிக்க ஆங்காங்கே கிணறுகளில் இருந்தும் போர்வெல் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் குடிநீர் வினியோகம் சீராக நடைபெறுவதை கண்காணிக்க 556 திட்டங்களும், 218 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. இதற்காக 258 சிறப்பு குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளது.

குடிநீர் வினியோகம் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து கருத்து கேட்பதற்காக அவசர தகவல் மையம் ஒன்று ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 9445802145 என்ற எண்ணில் பொதுமக்கள் தகவல்களை தெரிவிக்கலாம்.

தண்ணீர் தட்டுப்பாடு உள்ள இன்றைய சூழ்நிலையில் ஆற்றுப்படுகைகளின் மேல் பரப்பில் 52 சதவீத திட்டங்களும், 27 சதவீதம் நீர் உரிஞ்சும் கிணறுகள் மூலமும் 16 சதவீதம் நீர் சேமிக்கும் கிணறுகள் மூலமும் 5 சதவீதம் இதர வழிகள் மூலமும் தண்ணீர் பெறப்பட்டு வினியோகம் நடைபெறுகிறது என அவர் கூறினார்.

சென்னையை பொறுத்த வரை 234.26 கோடிக்கு நிதி ஒதுக்கப்பட்டு குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணிகள் அனைத்தும் முடியும் தருவாயில் உள்ளன. பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் வறண்ட காரணத்தால் வீராணம் ஏரியில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.

இது தவிர கடல்நீரை குடி நீராக்கும் திட்டம் மூலமும், கல்குவாரி தண்ணீரும் சுத்திகரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. ரெயில் மூலமாகவும் ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் கொண்டு வர ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இதுதவிர தாமரைப்பாக்கம் பகுதியில் மாக்ரல், கீழானூரில் 316 விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து ராட்சத தொட்டியில் நிரப்பி அங்கிருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.

அந்த பகுதியில் 13 ‘போர்வெல்’ அமைக்கப்பட்டுள்ளது.வீராணம் பகுதியிலும் 9 போர்வெல் கிணறுகள் அமைக்கப்பட்டு தண்ணீர் எடுக்கப்படுகிறது. சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு இருப்பதை கருத்தில் கொண்டு குடியிருப்பு பகுதிகளில் 3 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 1190 சிண்டெக்ஸ் குடிநீர் தொட்டிகள் கூடுதலாக வைக்கப்பட்டு உள்ளது. 850 லாரிகள் மூலம் தினமும் 8500 நடைகள் லாரி தண்ணீர் வினியோகமும் நடைபெறுகிறது.

கடந்த 5 ஆண்டுக்கு முன்பு வரை சென்னைக்கு தினமும் 851 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டது. தற்போது படிப்படியாக அது குறைக்கப்பட்டு 500 மில்லியன் லிட்டர் என்ற அளவுக்கு வந்துள்ளது. வருகிற நவம்பர் மாதம் வரை இதே அளவில் தண்ணீரை சீராக வழங்க முடியும் என கருதுகிறோம் என சென்னை குடிநீர் வாரிய அதிகாரி தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்