Wednesday, 26th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மத்திய அரசு உன்னிப்பாக வாயு புயல் நிலவரத்தை கவனித்து வருகிறது: பிரதமர் மோடி

ஜுன் 12, 2019 02:16

புதுடெல்லி: அரபிக்கடலில் சமீபத்தில் உருவான குறைந்த காற்றழுத்தம் புயலாக மாறியது. அந்த புயலுக்கு வாயு என பெயரிடப்பட்டது. அது தீவிரமடைந்து வடக்கு திசை நோக்கி நகர்ந்தது. நேற்று மாலை நிலவரப்படி அந்த புயல் குஜராத் கடற்கரையில் இருந்து 650 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டிருந்தது.

கோவாவில் இருந்து 420 கி.மீ. தொலைவில் அரபிக்கடலில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் வாயு புயல் இன்று காலை மையம் கொண்டு இருந்தது. அது மேலும் தீவிரமடைந்து, வடதிசை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. நாளை குஜராத்தின் போர்பந்தர் மற்றும் மகுவா கடற்கரை இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
 
புயல் கரையை கடக்கும் போது 135 கி.மீ.க்கு மேல் சூறைக்காற்று வீசும். இடி மின்னலுடன் மழை பெய்யும். கடலோர பகுதிகளில் தாழ்வான இடங்களில் கடல் தண்ணீர் புகுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாயு புயல் குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் மோடி கூறியதாவது: குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் வாயு புயல் நிலவரத்தை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. மாநில அரசுகளுடன் தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிந்து வருகிறேன்.

தேவையான உதவிகளை வழங்க தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர். அரசு மற்றும் உள்ளூர் முகவர்கள் பாதிக்கப்பட்ட  பகுதிகளில் சென்று  முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். குஜராத் உள்ளிட்ட வாயு புயல் பாதிக்கும் மாநிலங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பிற்காகவும், நலனுக்காகவும் பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்