Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

12ம் வகுப்பு பாட புத்தகத்தை 5 ஆக குறைக்க தமிழக அரசு திட்டம்

ஜுன் 15, 2019 06:07

சென்னை: பள்ளிக்கல்வித் துறையில் அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன. போட்டித் தேர்வுகளை சமாளிக்கும் ஆற்றல் தமிழக மாணவர்களுக்கு இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. கற்றல் சுமை இல்லாமல் இனிதாக இருக்கும் வகையில் பாடத்திட்டங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
 
கடந்த ஆண்டு 10-ம் வகுப்பில் மொழித்தாள்களை ஒன்றாக இணைத்து ஒரே பாடமாக்கி அறிவிக்கப்பட்டது. அதே போல பிளஸ்-2 பாடத்திட்டங்கள் 10 வருட இடைவெளிக்கு பிறகு மாற்றி அமைக்கப்பட்டன. 1200 மதிப்பெண் என்று இருந்ததை 600 ஆக குறைத்து தேர்வு நடத்தப்பட்டன. இந்த நிலையில் பிளஸ்-2 வகுப்பிற்கு தற்போது உள்ள 6 பாடங்களை 5 ஆக குறைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. தமிழ், ஆங்கில மொழித்தாள்கள் தவிர மேலும் 4 பாடங்கள் உள்ளன. இவற்றில் ஒரு பாடத்தை குறைத்து மாணவர்களின் பாட சுமையை குறைக்கவும் பரிசீலித்து வருகிறது.

மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் மருத்துவம், பொறியியல் உயர் கல்வியில் சேருவதற்கு உரிய பாடப்பிரிவுகளை தேர்வு செய்து படிக்கின்றனர். இரண்டையும் பயோ-கெமிஸ்ட்ரி பாடப்பிரிவை எடுத்தவர்கள் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க முடியும். உயிரியல் பாடத்தை மையமாக கொண்டு படித்த மாணவர்கள் மருத்துவ படிப்புகளில் மட்டும் தான் சேர முடியும்.

புதிய பாடத்திட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் என்ஜினீயரிங் படிக்க விரும்புபவர்கள் உயிரியல் படிக்க தேவையில்லை. அது போல மருத்துவ படிப்பு படிக்க விரும்புவர்கள் கணித பாடத்தை தவிர்க்கலாம். அந்த அடிப்படையில் பாடத் திட்டங்கள் அவரவர் விருப்பத்திற்கு மட்டும் தேர்வு செய்து படிக்கும் வகையில் பாடத்திட்டம் குறைக்கப்படுகிறது என்று அரசு தேர்வுத்துறை வட்டாரம் தெரிவிக்கின்றன.

மருத்துவம், பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு ஏற்றவாறு தனியாக பாடத்திட்டம் வகுக்கப்படுகிறது. மருத்துவ படிக்க விரும்புவர்கள் தமிழ், ஆங்கிலம் மொழி தாள்களோடு, இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களை படிக்க வேண்டும். பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் உயிரியல் பாடத்திற்கு பதிலாக கணிதத்தை படிப்பார்கள் என்று பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த புதிய பாடத்திட்டம் நடைமுறைக்கு வரும்போது பிளஸ்-2 தேர்வின் மொத்த மதிப்பெண்கள் 600-ல் இருந்து 500 ஆக குறையும். சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தை போல 500 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும். இதனால் மாணவர்களின் மன அழுத்தம் குறைய வாய்ப்பு உள்ளது என்று அதிகாரிகள் கருதுகிறார்கள்.

தமிழகத்தில் அறிவியல் பாடத்தில் டாப் பட்டியலில் இடம் பெற்றவர்கள் மருத்துவம், பொறியியல் ஆகிய 2 படிப்புகளுக்கு விண்ணப்பிக்கிறார்கள். இதில் சிறந்த மருத்துவ கல்லூரி கிடைக்கும் பட்சத்தில் பொறியியல் படிப்பை உதறி விடும் நிலை உள்ளது. இதனால் அரசு ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவதில் பல்வேறு சிரமங்கள் எழுகின்றன. பிளஸ்-2 வகுப்பில் பாடப்பிரிவுகள் குறைக்கப்பட்டால் இதுபோன்ற சிக்கல் ஏற்படாது என்று கருதுகிறார்கள். பிளஸ்-2 வகுப்பில் பாடங்களை குறைப்பது தொடர்பாக பள்ளிக்கல்வி, அரசு தேர்வுத்துறை அதிகாரிகளும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்