Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னையில் குடிநீர் பஞ்சம்: 15 பெண்கள் விடுதிகள் மூடப்பட்டன

ஜுன் 18, 2019 06:32

சென்னை: சென்னை நகரில் குடிநீருக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு நாளுக்கு நாள் மக்களுக்கு தவிப்பை அதிகரிக்க செய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகரில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 1,400 மில்லி மீட்டர் மழைப் பொழிவு இருக்கும்.

2015-ம் ஆண்டுக்குப் பிறகு சென்னையில் மழை பெய்யும் அளவு ஆண்டு தோறும் குறைந்தபடி உள்ளது. கடந்த ஆண்டு 828 மில்லி மீட்டர் மழைதான் பெய்தது. இந்த ஆண்டு சென்னையில் இன்னும் மழை பெய்யவில்லை. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம் பாக்கம் உள்ளிட்ட முக்கிய ஏரிகள் அனைத்தும் வறண்டு விட்டன. இதன் காரணமாக சென்னை மக்களுக்கு வழக்கமாக கிடைக்கும் குடிநீர் முழுமையாக தடைபட்டுள்ளது. இதையடுத்து மாற்று ஏற்பாடுகள் மூலம் சென்னை மக்களுக்கு குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை நகர மக்களுக்கு ஒரு நாளைக்கு 1200 மில்லியன் லிட்டருக்கு மேல் குடிதண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் தற்போது தினமும் 525 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதில் 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் நெம்மேலி, மீஞ்சூரில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள் மூலம் கிடைக்கிறது.

வீராணம் ஏரியில் இருந்து 90 மில்லியன் லிட்டர், நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் இருந்து 60 மில்லியன் லிட்டர், நெய்வேலியில் போடப்பட்டுள்ள போர் வெல்கள் மூலம் 30 மில்லியன் லிட்டர் தண்ணீர் கிடைக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் தங்கள் விவசாய நிலத்தில் போட்டுள்ள போர்வெல்கள் மூலம் 110 மில்லியன் லிட்டர், திருவள்ளுர் மாவட்டத்தில் அரசு அமைத்துள்ள போர் வெல்கள் மூலம் 35 மில்லியன் லிட்டர், ரெட்டேரி, அயனம்பாக்கம் ஏரி, பெரும்பாக்கம் ஏரி, எருமையூர் கல்குவாரி மூலம் 20 மில்லியன் லிட்டர் தண்ணீர் கிடைக்கிறது. நவம்பர் மாதம் வரை இப்படி தினமும் 525 மில்லியன் லிட்டர் குடி நீரை வழங்க முடியும் என்று தமிழக அரசு சொல்கிறது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக இந்த தண்ணீர் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. போர் வெல்களில் கிடைக்கும் தண்ணீர் அளவு குறைந்து போனதே இதற்கு முக்கிய காரணம் என்று தெரிய வந்துள்ளது. இந்த தட்டுப்பாடு தனி நபர்களிடம் மட்டுமின்றி அனைத்துத் துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிக் கூடங்கள், திருமண மண்டபங்கள், சிறு, நடுத்தர தொழிற்சாலைகள், ஐ.டி. நிறுவனங்கள், சிறு, நடுத்தர ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் என்று அனைத்து பிரிவுகளிலும் தண்ணீர் தட்டுப்பாடு படாதபாடு படுத்தத் தொடங்கியுள்ளது. கல்வி நிறுவனங்கள் பணம் கொடுத்து தண்ணீர் வாங்கி மாணவர்களுக்கு கொடுக்க முடியாமல் தவிக்கின்றன. ஓட்டல் உரிமையாளர்களும் இதே போன்ற இடையூறால் வாடிக்கையாளர்களை எதிர்கொள்ள முடியாமல் உள்ளனர். வேறு வழியின்றி உணவு வகைகளை குறைத்து, சில உணவுகளை மட்டும் விற்பனை செய்கிறார்கள். சில ஓட்டல்கள் தண்ணீர் பெற முடியாமல் மதியம் கடைகளை மூடி விடுகின்றன.

திருவல்லிக்கேணியில் உள்ள தங்கும் விடுதிகளான மேன்சன்களும் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வருகின்றன. பெரிய மால்களில் உள்ள கடைகளும் தண்ணீர் கிடைக்காமல் ஒரு நாளைக்கு 4 மணி நேரமே திறந்து வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. தனியார் நிறுவனங்கள் பல தண்ணீர் இல்லாமல் பணிகளை முடக்கியுள்ளன. இதற்கிடையே தண்ணீர் தட்டுப்பாட்டை பயன்படுத்தி தண்ணீர் விலையை உயர்த்தி விட்டனர். 12 ஆயிரம் லிட்டர் டேங்கர் லாரி தண்ணீர் முன்பு ரூ.1200க்கு விற்கப்பட்டது.

தற்போது அது ரூ.4 ஆயிரமாக உயர்ந்து விட்டது. கல்வி நிறுவனங்கள், ஓட்டல்கள் 12 ஆயிரம் லிட்டர் லாரிக்கு ரூ.5 ஆயிரம் கொடுக்க முன் வந்தும் தண்ணீர் கிடைக்கவில்லை. இது தண்ணீர் அதிகம் புழங்கும் சேவைத் துறைகளை முடக்கி வருகிறது. சென்னையில் பணிபுரியும் பெண்களில் பலர் விடுதிகளில் தங்கியுள்ளனர். சென்னை மற்றும் புறநகர்களில் மட்டும் சுமார் 2 ஆயிரம் பெண்கள் தங்கும் விடுதிகள் உள்ளன. ஒவ்வொரு விடுதியிலும் 30 முதல் 60 பெண்கள் வரை தங்கி உள்ளனர்.

இவர்கள் குளிக்க, உடைகளை துவைப்பதற்கு நிறைய தண்ணீர் தேவை. லாரி, லாரியாக தண்ணீர் வாங்கி ஊற்றினாலும் பெண்கள் விடுதிக்கு தேவைப்படும் தண்ணீரை பெற முடிய வில்லை. இதனால் பெண்கள் விடுதிகளை நடத்துபவர்கள் அதை மூடி வருகிறார்கள். சென்னையில் இதுவரை 15 பெண்கள் தங்கும் விடுதிகள் மூடப்பட்டு விட்டன. மழை பெய்து தண்ணீர் வந்த பிறகு வாருங்கள் என்று அந்த விடுதிகளில் தங்கி இருந்த பெண்களிடம் கூறப்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு விடுதி பெண்களிடம் தவிப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் தண்ணீர் தேவைக்காக 5 கிணறுகள் உள்ளது. இதில் 3 கிணறு வறண்ட நிலையில் உள்ளது. 2 கிணற்றில் தண்ணீர் எடுக்கப்படுகிறது. ஆஸ்பத்திரிக்கு தினசரி வெளிநோயாளியாக 7 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர். உள்நோயாளியாக 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உள்ளனர்.

இவர்கள் தேவைக்காக ‘போர்வெல்’ தண்ணீர் முழுமையாக பயன்படுத்தப்படுகிறது. இது தவிர 30-க்கும் மேற்பட்ட சென்னை குடிநீர் வாரிய லாரி தண்ணீரும் வரவழைக்கப்படுகிறது. ஆஸ்பத்திரியில் தண்ணீர் வசதி உள்ளதால் நோயாளிகளுடன் தங்கி இருக்கும் உறவினர்கள் ஆஸ்பத்திரியிலேயே குளித்து துணி துவைக்க தொடங்கி விட்டனர். ஒரு நோயாளிக்கு உறவினர்கள் 3 பேர் வரை வந்து செல்வதால் அவர்கள் குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும் ஆஸ்பத்திரியில் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவ மனையில் அதிக ‘போர்வெல்’ உள்ளதால் தண்ணீர் தட்டுப்பாடு இல்லை என்றும் தேவையான அளவு தண்ணீர் கிடைத்து வருவதாகவும் ஆஸ்பத்திரி டீன் ஜெயந்தி தெரிவித்தார். சென்னை கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியிலும் தண்ணீர் தட்டுப்பாடின்றி வருவதாக நோயாளிகள் தெரிவித்தனர்.

ஆனால் தனியார் ஆஸ்பத்திரிகளில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகம் உள்ளது. லாரி தண்ணீரை எதிர்பார்த்து தான் பல ஆஸ்பத்திரிகள் உள்ளன. ஆஸ்பத்திரியில் உள்ள நோயாளிகளுடன் உறவினர் ஒருவர் மட்டுமே தங்க வேண்டும். 2 பேர் தங்குவதற்கு அனுமதி கிடையாது என்று அறிவித்துள்ளனர். தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக நோயாளிகளை பார்க்க வருபவர்கள் நாள் முழுவதும் அறையிலயே தங்க கூடாது என்றும் கூறி வருகின்றனர். இதுபற்றி தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் கூறுகையில், “தண்ணீர் லாரி உடனுக்குடன் வருவதில்லை என்றும், பதிவு செய்து 2 நாள் கழித்துதான் லாரி தண்ணீர் கிடைப்பதாகவும்” தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்