Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

13 மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு

ஜுன் 18, 2019 06:36

மதுரை: சிவகங்கை டி.புதூரை சேர்ந்தவர் வக்கீல் கிருஷ்ணன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- சிவகங்கை மாவட்டத்தில் 6 ஆயிரம் கண்மாய்கள், 3 ஆயிரம் குளங்கள் உள்ளன. இவற்றின் நீராதாரமாக சருகணி ஆறு, மணிமுத்தாறு, பாலாறு, தேனாறு, உப்பாறு, நாட்டாறு, விருசுகனியாறு, பாம்பாறு உள்ளிட்ட 10 சிற்றாறுகள் உள்ளன.

இந்த நீர்நிலைகள், சிற்றாறுகள் பெரும்பாலும் ஆக்கிரமிப்பில் உள்ளன. இவற்றில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுகிறது. இதனால் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. சீமைக் கருவேல மரங்களும் அதிகளவில் உள்ளன.

அதிகளவில் மணல் அள்ளப்படுவதால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. மழை பெய்யும் நேரத்தில் சிற்றாறுகளின் நீர், கண்மாய் மற்றும் குளங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. கிடைக்கும் மழை நீரையும் தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மனு அளித்தாலும் அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுப்பதில்லை.

எனவே, சட்டவிரோத மணல் திருட்டை தடுக்கவும், நீர்நிலைகளிலுள்ள ஆக்கிரமிப்பு மற்றும் சீமைக் கருவேல மரங்களை அகற்றவும், நீர்நிலைகளையும், சிற்றாறுகளை பழைய இயல்பு நிலைக்கு கொண்டுவரவும் தேவையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன், புகழேந்தி ஆகியோர், உயர் நீதிமன்ற மதுரை ஐகோர்ட்டின் எல்லைக்கு உட்பட்ட 13 மாவட்டங்களிலுள்ள நீர்நிலைகள், அவற்றில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட விபரம், ஆக்கிரமிப்பு அகற்றப்படாதவை எவ்வளவு, நீர்நிலைகளை தூர்வாரும் பணிக்காக கடந்த 3 ஆண்டுகளில் எவ்வளவு தொகை செலவிடப்பட்டது என்பது குறித்து பொதுப்பணித்துறை முதன்மை செயலர், நகராட்சி நிர்வாக செயலர் ஆகியோர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 23க்கு ஒத்தி வைத்தனர்.
 

தலைப்புச்செய்திகள்