Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

21 குண்டுகள் முழங்க புல்வாமாவில் உயிர்நீத்த சுப்பிரமணியன் உடல் விளைநிலத்தில் விதைக்கப்பட்டது

பிப்ரவரி 16, 2019 01:43

கயத்தாறு: காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகேயுள்ள சவலாப்பேரி கிராமம், மேலத்தெருவை சேர்ந்த கணபதி மகன் சுப்பிரமணியன்(30) வீரமரணம் அடைந்தார். 

இவர் ஸ்ரீநகரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வீரராக பணியாற்றினார். இவருக்கு கிருஷ்ணவேணி(23) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ஒரு ஆண்டுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. சுப்பிரமணியன் கடந்த மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் அவர் 10-ந்தேதி காலையில் மீண்டும் பணிக்கு புறப்பட்டு சென்றார்.நேற்று முன்தினம் சுப்பிரமணியன் ஸ்ரீநகர் சென்று மீண்டும் பணியில் சேர்ந்ததாக தன்னுடைய மனைவியிடம் செல்போனில் தெரிவித்தார். 

இந்த நிலையில் பயங்கரவாதி நடத்திய திடீர் தாக்குதலில் சகவீரர்களுடன் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அறிந்த அவரது குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர். இதனால் சவலாப்பேரி கிராமமே சோகத்தில் மூழ்கியது. சுப்பிரமணியன் உடல் இன்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் மற்ற வீரர்கள் உடல்களுடன் திருச்சி வந்தது. 

திருச்சியில் இருந்து மதுரைக்கு விமானம் வந்தது.  அங்கு கயத்தாறு வீரர் சுப்பிரமணியனின் உடல் இறக்கப்பட்டது. அவரது உடலுக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், கலெக்டர் நடராஜன், போலீஸ் ஐ.ஜி.சண்முக ராஜேஸ்வரன், டி.ஐ.ஜி. பிரதீப்குமார், போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் அஞ்சலி செலுத்தினர். 

அதனைத் தொடர்ந்து சுப்பிரமணியனின் உடல் தனி வாகனத்தில் கயத்தாறு அருகே உள்ள சவலாப்பேரி கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சுப்பிரமணியன் உடலுக்கு தமிழக அரசு சார்பில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தினார். அப்போது, தமிழக அரசு அறிவித்த 20 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு அரசு பணி நியமன உத்தரவை துணை முதல்-அமைச்சர் அளித்தார்.  

சவலாப்பேரி கிராமத்தை சுற்றியுள்ள 40-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சவலாப்பேரி கிராமத்திற்கு திரண்டு வந்து சுப்பிரமணியன் படத்தை அலங்கரித்து வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் சுப்பிரமணியன் உடல் வீட்டின் அருகாமையில் உள்ள அவரது குடும்பத்துக்கு சொந்தமான விவசாய நிலத்துக்கு இறுதி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.  

அங்கு மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி மற்றும் காவல் துறை உயரதிகாரிகளும், அரசு உடரதிகாரிகளும் சுப்பிரமணியன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மாலை சரியாக 6.15 மணியளவில் 21 குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் சுப்பிரமணியனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 

தலைப்புச்செய்திகள்