Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மீனவர்களுக்கு சலுகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

ஜுன் 23, 2019 07:26

சென்னை: த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 
மத்திய மாநில அரசுகள் தமிழக மீனவர்களின் மீன் பிடித் தொழில் பாதுகாப்பாக, லாபகரமாக நடைபெறுவதற்கு பல்வேறு உதவிகள், சலுகைகளை வழங்கி பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். 

தமிழக மீனவர்கள் மீன்பிடித் தடைக்காலம் முடிந்து மீண்டும் மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்குச் செல்வதால் அவர்களின் தொழிலுக்கு மத்திய மாநில அரசுகள் உதவிட வேண்டும். புதிய மீன்பிடி படகுகளை கடலில் செலுத்துவதற்கு அரசிடம் அங்கீகாரம் பெறமுடியாமல் இருப்பது மீனவர்களுக்கு வேதனை அளிக்கிறது. மேலும் படகுகளுக்கு பதிவு எண் வழங்குவதும் இல்லை என கூறுகின்றனர். 

படகுகளுக்கு பதிவு எண் கிடைக்காத நிலையில் காப்பீடும் செய்ய முடியாது. எனவே மீன்பிடி படகுகளை கடலோர காவல் படையினர் திருப்பி அனுப்பி விடுகின்றனர். இதனால் படகுகளை இயக்கும் மீனவர்கள், தொழிலாளிகள் எல்லோரும் பாதிக்கப்படுகிறார்கள்.  

மீன்பிடித்தடைக்காலம் முடிந்தும் மீன்பிடிக்க செல்ல முடியவில்லை என்றால் அவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும். ஆகவே படகுகளுக்கு பதிவு எண் வழங்கவும், படகுகள் கடலுக்குச் செல்லும் போது பாதுகாப்பு கொடுக்கவும், தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் பாதுகாப்பாக, லாபகரமாக நடைபெறுவதற்கும் பல்வேறு உதவிகள், சலுகைகளை வழங்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்