Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழக வீரர் சிவச்சந்திரன் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது

பிப்ரவரி 16, 2019 02:08

அரியலூர்: காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வாகனத்தின் மீது பயங்கரவாதிகளின் தற்கொலை படை தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தையும், பயங்கரவாதிகளுக்கு எதிராக மக்களிடம் ஆவேசத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

இந்த தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன், சுப்பிரமணியன் ஆகிய 2 வீரர்கள் பலியானார்கள். சிவச்சந்திரன் அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்தைச் சேர்ந்தவர். சுப்பிரமணியனுக்கு சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு. பலியான மற்ற வீரர்கள் உடலுடன் தமிழக வீரர்களின் உடல்களும் டெல்லி கொண்டு வரப்பட்டு பிரதமர் மோடி , உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் ஆகியோர் அஞ்சலிக்கு பின் சொந்த ஊர்களுக்கு உடல்கள் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டன. 

தமிழக வீரர்கள் சுப்பிரமணியன், சிவச்சந்திரன் உடல்களுடன் கேரளா, கர்நாடகாவைச் சேர்ந்த 2 வீரர்களின் உடல்கள் தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் திருச்சி விமான நிலையம் வந்து சிவச்சந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். 

அப்போது சிவச்சந்திரனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். அவர்களுக்கு நிர்மலா சீதாராமன் ஆறுதல் கூறினார். இதைத்தொடர்ந்து சிவச்சந்திரனின் உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் ஏற்றி சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்துக்கு எடுத்து செல்லப்பட்டது.  

கார்குடி கிராமத்தில் உறவினர்கள் மற்றும் பொது மக்களின் அஞ்சலிக்காக சிவச்சந்திரனின் உடல் வைக்கப்பட்டது. பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.  நிர்மலா சீதாராமன் இங்கும் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.தமிழ் மாநில காங்கிரஸ் ஜி.கே.வாசனும் அஞ்சலி செலுத்தினார். 

சிவச்சந்திரனின் உடலுக்கு அவருடைய மகன் ராணுவ உடையில் அஞ்சலி செலுத்தினான். அரசு அறிவித்த ரூ.20 லட்சத்துக்கான கருணை உதவி காசோலை சிவச்சந்திரனின் குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது. சுமார் 5.10 மணியளவில் சிவச்சந்திரன் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தலைப்புச்செய்திகள்