Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

255 மாவட்டங்களில் நீர் சேகரிப்பு திட்டம் கொண்டுவர மத்திய அரசு தீவிரம்

ஜுன் 27, 2019 07:58

புதுடெல்லி: பல நாடுகளை ஒப்பிடும் போது, இந்தியாவில் மழை அதிகமாகவே பெய்து வருகிறது. ஆனாலும் நீர்சேகரிப்பு சரியில்லாததால் பல மாநிலங்களில் தண்ணீர்
தட்டுப்பாடு நிலவுகிறது. விவசாயம், குடிநீர், மற்ற தேவைகளுக்கு தண்ணீர் இல்லாமல் மக்கள் தவிக்கும் நிலை உள்ளது. இதை தடுப்பதற்காக மத்தியஅரசு பல்வேறு
திட்டங்களை தீட்டி இருக்கிறது.

அதன் ஒரு கட்டமாக நீர் மேலாண்மைக்காக ஜலசக்தி என்ற தனி துறையை இப்போது உருவாக்கி இருக்கிறார்கள். இதன் மூலம் நீர் சேகரிப்பு மற்றும் மேலாண்மை
திட்டங்களை தீவிரமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முக்கிய கட்டமாக ஒவ்வொரு மாநிலத்திலும் எங்கெல்லாம் தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாக
இருக்கிறது என்பதை கண்டறிந்துள்ளனர். அந்த இடங்களில் தண்ணீரை மேம்படுத்துவதற்கு திட்டங்களை உருவாக்க உள்ளனர்.

நாட்டில் மொத்தம் 255 மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறை மோசமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அங்கு நீர்சேகரிப்பு மற்றும் நீர்வளத்தை மேம்படுத்த முதல்
நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதை எவ்வாறு நிறைவேற்றலாம் என்பதை ஆய்வு செய்து கண்டறிவதற்காக மாவட்டதுக்கு ஒரு அதிகாரி என 255 அதிகாரிகளை மத்திய
அரசு நியமித்திருக்கிறது.

மத்திய அரசில் உள்ள பல்வேறு துறைகளிலும் சிறப்பாக செயல்படும் அதிகாரிகளை தேர்வு செய்து இந்த பணிக்காக நியமித்துள்ளனர். அவர்கள் நீர்மேலாண்மை
நிபுணர்கள், சமூக சேவை அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் மாநில அரசு அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வுகளை மேற்கொள்வார்கள்.

முதலாவதாக தென் மேற்கு பருவமழை காலத்தில் ஆய்வை தொடங்க உள்ளனர். இதற்காக வருகிற ஜூலை 1-ந்தேதி முதல் செப்டம்பர் 15-ந்தேதி வரை முதல் கட்ட
ஆய்வை நடத்துகிறார்கள். அதன்பிறகு வடகிழக்கு பருவமழை பெய்யும் காலத்தில் அடுத்த கட்ட ஆய்வு நடைபெறுகிறது. அக்டோபர் 1-ந்தேதியில் இருந்து நவம்பர்
30-ந்தேதி வரை அந்த ஆய்வு நடைபெறும்.

இந்தியாவில் மொத்தம் 5500 வட்டாரங்கள் உள்ளன. இவற்றில் 1593 வட்டாரங்களில் நீர்தட்டுப்பாடு மிக மோசமாக இருக்கிறது. அதாவது நாட்டில் உள்ள மொத்த
வட்டாரத்தில் 29 சதவீத இடங்களில் நீர் தட்டுப்பாடு கடுமையாக உள்ளது.

மழை நீரை சேகரிப்பது, மழை பெய்யும் போது ஓடிவரும் தண்ணீரை அணை, ஏரி, குளம் போன்றவற்றை அமைத்து நீர்நிலைகளை புதிதாக ஏற்படுத்துவது. ஏற்கனவே
உள்ள நீர் நிலைகளை எவ்வாறு புதுப்பித்து சேமிப்பு திறனை அதிகப்படுத்துவது, எங்கெல்லாம் தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது என்பதை ஆராய்ந்து அதை தடுப்பது,
ஆழ்குழாய் கிணறுகளுக்கு தண்ணீர் எப்போதும் கிடைக்கும் வகையில் நீர்சேகரிப்பை செய்வது, மழையை அதிகரிக்கும் வகையில் எந்தெந்த பகுதியில் காடுகளை
அதிகமாக வளர்ப்பது என்பது பற்றி முழுமையாக ஆய்வு நடத்துவார்கள்.

தலைப்புச்செய்திகள்