Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

செல்பி எடுக்கும்போது ரயில் மோதி கல்லூரி மாணவர் பலி

ஜுன் 29, 2019 07:14

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே செல்பி மோகத்தால் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது ரெயில் முன்பு நின்று செல்பி எடுத்த கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். புதுக்கோட்டை மச்சுவாடியை சேர்ந்தவர் குமாரவேல். ஓய்வு பெற்ற சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர். இவரது மனைவி ரேவதி. புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள். இதில் 2-வது மகன் மணிகண்டன் (வயது 19). இவர் புதுக்கோட்டை அருகே சிவபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று மணிகண்டனின் நண்பருக்கு பிறந்தநாள். இதை உற்சாகமாக கொண்டாட முடிவு செய்திருந்தனர். இதற்காக நேற்று முன்தினமே பீர்பாட்டில்களை வாங்கி வைத்திருந்தனர். நேற்றுக் காலை வழக்கமாக செல்லும் பூசத்துறை வெள்ளாற்று ரெயில்வே பாலம் அருகில் பிறந்தநாளை கொண்டாடினர். ரெயில் தண்டவாளம் அருகே நண்பர்களுடன் பீர் அருந்திக்கொண்டு இருந்த மணிகண்டனுக்கு ரெயில் வரும் சத்தம் கேட்டதும், அதன் அருகில் நின்று செல்பி எடுக்கும் ஆசை ஏற்பட்டது.

அப்போது அந்த வழியாக மானாமதுரை-மன்னார்குடி பயணிகள் ரெயில் வந்தது. உடனே மணிகண்டனும் அவரது நண்பர் மகேந்திரனும் செல்போனில் செல்பி எடுக்க முயன்றனர். ரெயில் தண்டவாளத்தின் மிக அருகில் போதையில் நின்று கொண்டு செல்பி எடுத்தபோது எதிர்பாராதவிதமாக ரெயில் மணிகண்டன், மகேந்திரன் ஆகியோர் மீது மோதியது. இதில் செல்போனுடன் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதைப் பார்த்த மற்ற நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே அப்பகுதி பொதுமக்களுடன் 2 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக நேற்று மாலை இறந்தார். அவரது உடலை பார்த்து பெற்றோர் மற்றும் நண்பர்கள் கதறி அழுதனர்.

மகேந்திரனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்று செல்பி மோகத்தால் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செல்போன்களிலேயே பேஸ்புக்கில் இதுபோன்று செல்பி எடுக்கும்போது மலையில் இருந்து தவறி விழுந்து இறப்பவர்கள், அருவி முன்பு நின்று செல்பி எடுக்கும்போது உயிரிழந்தவர்கள், விலங்குகள் முன்பு நின்று செல்பி எடுக்க நினைத்து காயமடைந்தவர்கள், ரெயில் முன்பு செல்பி எடுக்க நினைத்து மரணத்தை தழுவியவர்கள் என காட்சிகள் வெளியாகி இருக்கின்றன. ஆனாலும் இது போன்று ஆபத்தான செல்பிகளை தொடர்ந்து இளைஞர்கள் எடுக்க நினைத்து ஆபத்தில் சிக்குவது அப்பாவி பெற்றோர்களை சோகத்தில் ஆழ்த்துகிறது.
 

தலைப்புச்செய்திகள்