Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மணல் கடத்தல் வேனை பிடித்ததால் தண்டனையாக டிரான்ஸ்பர்: பெண் காவலர் தற்கொலை முயற்சி

ஜுன் 29, 2019 07:46

திருவையாறு: மணல் கடத்தல் வேனை பிடித்த பெண் போலீஸ் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். இதை தட்டிக்கேட்ட பெண் போலீசை அதிகாரிகள் மிரட்டியதால் இதனால் அவர் அதிர்ச்சியில் விஷம் குடித்தார். மேலும், மணல் கடத்தலில் தொடர்புடைய அதிகாரிகளின் பெயரை குறிப்பிட்டு கடிதமும் எழுதி வைத்துள்ளார். 

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் காவலராக இருப்பவர் சுபாஷினி (30). திருமணமானவர், 2 குழந்தைகள் உள்ளனர். இவர் மாற்றுப்பணியாக திருவையாறு காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வேலை செய்து வந்தார். 

கடந்த மே மாதம் 25ம் தேதி பணிக்கு சென்றபோது ஒரு வேனில் மணல் கடத்தி வருவதை சுபாஷினி பார்த்தார். அந்த வேனை மடக்கி பிடித்து திருவையாறு காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டார். பின்னர் அவர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு பணிக்கு சென்று விட்டார்.
இந்நிலையில், சுபாஷினி பிடித்து கொடுத்த வேனை போலீசார் விடுவித்து விட்டனர். 

வழக்கு பதிவு செய்யவுமில்லை. இதுகுறித்து சுபாஷினி மறுநாள் கேட்டு உள்ளார். அதற்கு போலீஸ் உயர் அதிகாரிகள் சரியான பதில் அளிக்காமல் மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சுபாஷினியை கடந்த 12ம் தேதி கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்திற்கு  அதிரடியாக மாற்றி விட்டனர். மணல் கடத்தலை பிடித்து கொடுத்ததற்காக தனக்கு இந்த தண்டனையா என்று வேதனையில் ஆழ்ந்த சுபாஷினி நேற்று கிழக்கு காவல் நிலையத்துக்கு பணிக்கு சென்றார். 

அவரை சுந்தரபெருமாள் கோயிலுக்கு பாதுகாப்பு பணிக்கு செல்லும்படி கூறினர். ஆனால் சுபாஷினி அங்கு பணிக்கு செல்லவில்லை. மனம் வெறுத்த நிலையில் உமையாள்புரம் என்ற இடத்தில் உள்ள விநாயகர் கோயிலில் மயங்கி கிடந்தார். அப்போது, அவர் காவலர் சீருடையில் இல்லை. வெகுநேரமாக ஒரு பெண் மயங்கி கிடப்பதை பார்த்த பொதுமக்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்சில் அவரை ஏற்றி அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். 

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், அவர் விஷம் குடித்திருப்பதாக தெரிவித்தனர். விசாரணையில் அவர் பெண் போலீஸ் சுபாஷினி என தெரியவந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறை வந்து விசாரித்தபோது, சுபாஷினியிடம் இருந்து ஒரு கடிதத்தை கைப்பற்றினர். அதில், ‘‘மணல் கடத்தல்காரர்களை பிடித்து கொடுத்ததால் எனக்கு தண்டனையா, என்னை இங்கு மாற்ற காரணம் வருவாயத்துறை அதிகாரிகளும், போலீஸ் அதிகாரிகளும், உளவுத்துறை காவல்துறையும் தான்’’ என குறிப்பிட்டுள்ளாராம். 

இதனால் அதிகாரிகள் மத்தியில் கிலி ஏற்பட்டுள்ளது. சுபாஷினி எழுதிய கடிதம் தற்போது  காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் உள்ளது. அதிகாரிகளை கண்டித்து பெண் போலீஸ் விஷம் குடித்த சம்பவம் பெரிய பிரச்னையை ஏற்படுத்தி விடும் என்பதால் இரவோடு இரவாக பெண் காவலரே  அரசு தலைமை மருத்துவமனையில் இருந்து மாற்றி தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று விட்டனர். இதுகுறித்து யாரிடமும் பேசக்கூடாது என்றும் பெண் காவலருக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 

தலைப்புச்செய்திகள்