Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கியாஸ் தட்டுப்பாடு அபாயம்- நாளை முதல் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக்

ஜுன் 30, 2019 07:19

நாமக்கல்: தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களை உள்ளடக்கிய தென்மண்டல பல்க் எல்.பி.ஜி.டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்த சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் மத்திய அரசின் பொதுத்துறை ஆயில் நிறுவனங்களில் இருந்து சிலிண்டரில் கியாசை நிரப்பும் மையங்களுக்கு சமையல் கியாசை கொண்டு செல்லும் பணிக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதற்கான பழைய டெண்டர் ஒப்பந்தம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 31-ந் தேதியுடன் முடிவடைந்தது. புதிய ஒப்பந்தத்தில் அந்தந்த மாநில லாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் இடம் பெற்று இருந்தன. இதனால் சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 700 டேங்கர் லாரிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை.
எனவே அனைத்து வாகனங்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்கக்கோரி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட நாமக்கல்லில் கடந்த 20-ந் தேதி நடைபெற்ற சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும் சங்கத்தின் சார்பில் ஆயில் நிறுவனங்களுக்கு வேலை நிறுத்தம் தொடர்பாக கடிதம் ஒன்றும் அனுப்பப்பட்டது. அதில் அனைத்து வாகனங்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்காவிட்டால் ஜூலை மாதம் 1-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து ஆயில் நிறுவன அதிகாரிகள் கடந்த 26-ந் தேதி தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு எட்டப்படவில்லை. எனவே நாளை (திங்கட்கிழமை) காலை 6 மணி முதல் திட்டமிட்டபடி சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கும் என தென்மண்டல பல்க் எல்.பி.ஜி.டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்து உள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவர் பொன்னம்பலம் கூறியதாவது:-

அனைத்து வாகனங்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்தி ஆயில் நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பி இருந்தோம். ஆனால் ஆயில் நிறுவனங்கள் இதுவரை எங்களது கோரிக்கையை நிறைவேற்றவில்லை. எனவே திட்டமிட்டபடி நாளை முதல் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்க உள்ளோம். இதனால் 4500 கேஸ் டேங்கர் லாரிகள் இயக்கப்படாமல் ஆங்காங்கு நிறுத்தி வைக்கப்படும்.
தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய 6 மாநிலங்களில் சுமார் 4500 டேங்கர் லாரிகள் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சமையல் எரிவாயுவை டேங்கர் லாரிகளில் ஏற்றிக்கொண்டு சிலிண்டரில் கியாஸ் நிரப்பும் மையங்களுக்கு கொண்டு செல்லும் பணி பாதிக்கப்படும்.
இதனால் தென் மண்டலத்திற்கு உட்பட்ட இந்த 6 மாநிலங்களிலும் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் நீடிக்கும். இதில் எந்த சமரசத்திற்கும் இடம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்

தலைப்புச்செய்திகள்