Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விஜய் மல்லையா விரைவில் இந்தியா கொண்டு வரப்படுகிறார் - லண்டன் கோர்ட்டில் இன்று விசாரணை

ஜுலை 02, 2019 09:12

  புதுடெல்லி :  பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா. பல்வேறு வங்கிகளிடம் இருந்து ரூ.9 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் அவர் இங்கிலாந்துக்கு தப்பி ஓடினார். அவரை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு வெஸ்ட் மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பு வழங்கி இருந்தது.

மத்திய அரசு அளித்த ஆவணங்கள் அடிப்படையில் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து அரசு கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து விஜய் மல்லையா லண்டன் கோர்ட்டில் எழுத்துபூர்வ மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏப்ரல் 5-ந்தேதி நீதிபதி வில்லியம் டேவிஸ் தள்ளுபடி செய்தார்.

இதையடுத்து அவர் எழுத்துபூர்வமற்ற ‘ஓரல் மேல்முறையீட்டு’ வழக்காக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஐகோர்ட்டின் மேல்முறையீட்டு நீதிமன்றத்தை அனுகினார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஜார்ஜ் லெக்காட், ஆண்ட்ரூ போப்பிள்வெல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று நடக்கிறது.

நாள் முழுவதும் நடைபெறும் விசாரணையின் போது இந்திய அரசு மற்றும் விஜய் மல்லையா தரப்பு வக்கீல்கள் கூடுதல் வாதங்களை முன் வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விசாரணையை தொடர்ந்து மனு மீதான தீர்ப்பை நீதிபதிகள் ஒத்தி வைக்க அதிகமான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் மல்லையாவின் அப்பீல் மனு நிராகரிக்கப்படும் பட்சத்தில் அடுத்த 28 நாட்டுகளில் அவரை இந்தியாவுக்கு கொண்டு வர முடியும். அதே சமயம் அவரது மனு ஏற்கப்பட்டால் விரிவான விசாரணை நடைபெறும்.

தலைப்புச்செய்திகள்