Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மேலும் காங்.எம்.எல்.ஏ.க்கள் கர்நாடக மாநிலத்தில் பதவி விலக முடிவு

ஜுலை 03, 2019 05:59

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் 105 எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதா வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக இருந்தது.

ஆனாலும் ஆட்சி அமைக்க தேவையான 113 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இல்லை. இதனால் 38 எம்.எல்.ஏ.க்களை கொண்ட ஜே.டி.எஸ். கட்சியும், 79 எம்.எல்.ஏ.க்களை கொண்ட காங்கிரசும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தன.

முதல்-மந்திரியாக ஜே.டி.எஸ். கட்சியை சேர்ந்த குமாரசாமியும், துணை முதல்-மந்திரியாக காங்கிரசை சேர்ந்த பரமேஸ்வரும் உள்ளனர்.

சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் 2 பேரின் ஆதரவும் இந்த கூட்டணி அரசுக்கு உள்ளது. அவர்கள் 2 பேரையும் குமாரசாமி, மந்திரிகளாக நியமித்தார். சில மாதங்களுக்கு முன்பு உமேஷ்ஜாதவ் என்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவில் சேர்ந்தார். அவருக்கு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட பா.ஜனதா வாய்ப்பு வழங்கியது. அவர் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆனந்த்சிங், ரமேஷ் ஜார்கிஹோளி ஆகிய 2 பேரும் திடீரென்று ராஜினாமா செய்தனர். இதைத்தொடர்ந்து கூட்டணி அரசுக்கு ஆதரவு தரும் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 117-ஆக குறைந்து விட்டது.

ஆனந்த்சிங், ரமேஷ் ஜார்கிஹோளி ஆகியோர் ஏற்கனவே சபாநாயகர் ரமேஷ் குமார் அலுவலகத்தில் ராஜினாமா கடிதத்தை கொடுத்தனர். ஆனால் ராஜினாமா கடிதம் தனக்கு கிடைக்கவில்லை என்று சபாநாயகர் கூறினார்.

இதைத்தொடர்ந்து கர்நாடக கவர்னரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை ஆனந்த்சிங் வழங்கினார். இன்று ரமேஷ் ஜார்கிஹோளி எம்.எல்.ஏ. கவர்னரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை நேரில் வழங்க உள்ளார்.

இந்த நிலையில் இன்னொரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. பீமாநாயக் ராஜினாமா செய்ததாக நேற்று தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவலை அவர் மறுத்தார். நான் காங்கிரசின் உண்மையான தொண்டன் என்றும், காங்கிரசில் தொடர்ந்து இருக்கிறேன் என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

இன்று அவர் கர்நாடக கவர்னரை சந்திக்க நேரம் கேட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் கவர்னரிடம் ராஜினாமா கடிதத்தை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவரை தவிர ராய்ச்சூர்- பெல்லாரி மாவட்டங்களை சேர்ந்த மேலும் 3 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து கவர்னரை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுப்பார்கள் என்று கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. காங்கிரசில் அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தி மந்திரி பதவி வழங்க முதல்-மந்திரி குமாரசாமி திட்டமிட்டு உள்ளார்.

தற்போது அமெரிக்க சுற்றுப்பயணத்தில் இருக்கும் அவர் விரைவில் பெங்களூரு திரும்ப உள்ளார். காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாளிப்பது குறித்து ஜே.டி.எஸ்.-காங்கிரஸ் கூட்டணி அரசின் ஒருங்கிணைப்பாளர் சித்தராமையா, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், மாநில காங்கிரஸ் செயல் தலைவர் தினேஷ் குண்டு ராவ், மந்திரி சிவக்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

தற்போதைய நிலையில் ஜே.டி.எஸ்.-காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு 117 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதில் 13 எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைத்து விட்டால் கூட்டணி அரசு தானாக கவிழ்ந்துவிடும். இதற்காக பா.ஜனதா திரைமறைவில் இருந்து எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசி வருவதாக கூட்டணி அரசின் ஒருங்கிணைப்பாளர் சித்தராமையா கூறி உள்ளார்.

கூட்டணி அரசுக்கு ஏற்பட்ட நெருக்கடியை தற்காலிகமாக தவிர்த்து விட்டதாக மந்திரி டி.கே.சிவக்குமார் கூறி உள்ளார்.

காங்கிரஸ்-ஜே.டி.எஸ். கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் பலர் ராஜினாமா செய்வார்கள் என்று பா.ஜனதா மூத்த தலைவர் ஈஸ்வரப்பா கூறி உள்ளார். மறைமுகமாக பேசி எம்.எல்.ஏ.க்களை இழுக்க வில்லை என்றும் அவர்களாகவே ராஜினாமா செய்து வருவதாகவும் கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர் எடியூரப்பா கூறி உள்ளார்.

தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவராக ராஜினாமா செய்து வருவது குமாரசாமி அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நெருக்கடியை அவர் எப்படி தீர்க்கப்போகிறார் என்று தெரியவில்லை.

தலைப்புச்செய்திகள்