Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கேரளாவில் மாயமான ஜெர்மன் பெண் தீவிரவாதியா? : நுண்ணறிவு பிரிவு போலீசார் விசாரணை

ஜுலை 04, 2019 10:17

திருவனந்தபுரம்: ஜெர்மன் நாட்டை சேர்ந்தவர் லிசா வெய்ஸ் (31). கடந்த மார்ச் 7ம் தேதி திருவனந்தபுரம் வந்தார். மே 5ம் தேதியுடன் விசாகாலம் முடிந்தும் அவர் நாடு  திரும்பவில்லை. இதுதொடர்பாக அவரது தாய் ஜெர்மன் தூதரகத்தில் புகார் செய்தார். இதன்படி திருவனந்தபுரம் சங்குமுகம் கூடுதல் எஸ்பி இளங்கோ  தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அவரை தேடும் பணி நடந்து வருகிறது. முதல்கட்ட விசாரணையில், மார்ச் 7ம் தேதி திருவனந்தபுரம் வந்த லிசாவுடன் இங்கிலாந்தை சேர்ந்த முகமது அலி என்பவரும் வந்துள்ளார். முகமது  அலி மார்ச் 15ம் தேதி லண்டன் திரும்பி சென்றுவிட்டார். ஆனால் லிசா என்ன ஆனார் என்பது தெரியவில்லை. இதுவரை நடந்த விசாரணையில் அவர்  குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து சர்வதேச போலீஸ் (இன்டர்போல்) உதவியை நாட கேரளா போலீசார் முடிவு செய்துள்ளனர்.

கேரளா போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் லிசா வரும்போது அவருடன் மேலும் ஒரு ஆண் வந்த தகவல் கிடைத்துள்ளது. முகம்மது அலி  மட்டும் இங்கிருந்து திரும்பி சென்றுள்ள நிலையில் லிசாவும், அவருடன் வந்த மற்றொருவரும் மாயமாகி இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.  லிசாவுடன் வந்த நபர் யார்? எந்த நாட்டை சேர்ந்தவர்? இங்கு அவர் என்ன ஆனார்? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் லிசா குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. லிசாவுக்கு கடந்த 8 வருடங்களுக்கு முன்பு இஸ்லாம் மத கொள்கைகளில்  ஈடுபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து முஸ்லிம்களின் புனித தலங்களுக்கு சென்று வந்துள்ளார். இவ்வாறு எகிப்து நாட்டின் கெய்ரோவுக்கு சென்றபோது  அங்கிருந்த முஸ்லிம் மதத்தை சேர்ந்த அமெரிக்கர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

லிசா முஸ்லிம் மதத்துக்கு மாறி அவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் பிறந்தன. சில ஆண்டுகளுக்கு பின்  கருத்துவேறுபாடு ஏற்பட்டு லிசா கணவனை விட்டு பிரிந்தார். அவரது குழந்தைகளை கணவனின் பெற்றோர் அமெரிக்காவுக்கு அழைத்து  சென்றுவிட்டனர். இதனால் மனம் உடைந்த லிசா அமைதியை தேடி முஸ்லிம்களின் புனித தலங்களுக்கு சென்று வந்தார். இவ்வாறு அவருக்கு  முகம்மது அலியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. முகம்மது அலிக்கு சில தீவிரவாத குழுக்களுடன் தொடர்பு இருக்கலாம் என்ற தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அவருடன் பழக்கம் ஏற்பட்டதால்  லிசாவுக்கும் தீவிரவாத குழுக்களுடன் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். 

இதுதொடர்பாக கேரளா மற்றும் மத்திய நுண்ணறிவு  பிரிவினர் விசாரணையை தொடங்கி உள்ளனர்.  லிசா ஏற்கனவே கடந்த 2012ம் ஆண்டு கேரளாவுக்கு வந்தார். அப்போது அவர் அமிர்தானந்தமயி மடத்துக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது. மீண்டும்  கடந்த மார்ச் மாதம் கேரளா வந்துள்ளார். தற்போது அவர் மாயமாகி இருப்பது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் உள்ள எந்த  விமான நிலையம் வழியாகவும் அவர் திரும்பி செல்லவில்லை.  மூன்றரை மாதங்களாக அவர் எங்கிருக்கிறார்? என்ன ஆனார்? என்பது மர்மமாக உள்ளது. கேரளா வந்த ஜெர்மன் பெண் மற்றும் அவருடன் வந்த  மற்றொரு ஆண் மாயமாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தலைப்புச்செய்திகள்