Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சிலை கடத்தல்-இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் கைது

ஜுலை 04, 2019 10:50

மதுரை : மதுரை அருகே இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான கோயிலில் ஐம்பொன் சிலைகள் திருடப்பட்டது தொடர்பாக, மண்டல இணை கமிஷனரை தனிப்படை போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள சௌடார்பட்டியில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான மீனாட்சியம்மன் கோயில் உள்ளது. பழமையான இந்த கோயில், பல ஆண்டுகளாக பரமாரிப்பு இல்லாமல் பூட்டி வைக்கப்பட்டு உள்ளது. இந்த கோயிலில் பழமை வாய்ந்த ஐம்பொன் சிலைகள் இருந்தன. இந்த சிலைகள் திடீரென மாயமாகி விட்டன. அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், சிலைகள் திருடு போனது குறித்து இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் புகார் கொடுத்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேல் தலைமையில் தனிப்படையினர், சௌடார்பட்டியில் உள்ள கோயில் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், இந்த சிலை கடத்தலில் அறநிலையத் துறை மண்டல இணை ஆணையர் பச்சையப்பனுக்கு தொடர்பு உள்ளது தெரிந்தது. இந்நிலையில் சிலை தடுப்பு பிரிவு போலீசார் இன்று அதிகாலை, மண்டல இணை கமிஷனர் பச்சையப்பனை கைது செய்தனர். தொடர்ந்து மதுரை எஸ்பி அலுவலகத்தில் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின்னர் அவரை கும்பகோணத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை துணை கமிஷனர் கவிதா, திருமணி உள்ளிட்ட அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். தற்போது செளடார்பட்டி மீனாட்சி கோயிலில் ஐம்பொன் சிலைகள் திருடு போன வழக்கில் மதுரை மண்டல இணை கமிஷனர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தீவிரமாக விசாரித்து வருகிறோம். விசாரணைக்கு பின்னர்தான் முழு விபரங்கள் தெரியவரும்’’ என்றார்.

தலைப்புச்செய்திகள்