Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பரோட்டா சாப்பிட்ட புதுமாப்பிள்ளை மரணம்

ஜுலை 05, 2019 04:35

புதுச்சேரி: புதுவை கருவடிக்குப்பம் பாரதி நகரை சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 32). கிருமாம்பாக்கத்தில் உள்ள கார் விற்பனை நிலையத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார்.
 
இவரது மனைவி சண்முக சுந்தரி. இவர்களுக்கு 6 மாதத்துக்கு முன்புதான் திருமணம் நடந்தது. சண்முகசுந்தரியின் சொந்த ஊர் திருநெல்வேலி ஆகும். சில நாட்களுக்கு முன்பு சண்முகசுந்தரி தாய் வீட்டுக்கு சென்றார். புருஷோத்தமன் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

நேற்று இரவு கடையில் பரோட்டா வாங்கி வந்து அதை சாப்பிட்டுக்கொண்டு இருந்தார். அந்த நேரத்தில் மனைவி சண்முகசுந்தரி ஊரில் இருந்து போன் செய்தார். அவரிடம் சிரித்து பேசிய படி சாப்பிட்டார். அப்போது பரோட்டா தொண்டையில் சிக்கிக் கொண்டது.

அதன்பிறகு அவரால் பேச முடியவில்லை. அவருடைய முனகல் சத்தம் மட்டும் கேட்டது. எதிர்முனையில் இருந்த சண்முகசுந்தரி தொடர்ந்து பேசியும் எந்த பதிலும் இல்லை.

இதனால் பதட்டம் அடைந்த அவர் முத்தியால்பேட்டையில் உள்ள உறவினருக்கு போன் செய்து தகவலை தெரிவித்தார். உடனே உறவினர் பாரதி நகருக்கு விரைந்து வந்தார்.

புருஷோத்தமன் வீடு உள்ளே பூட்டப்பட்ட நிலையில் இருந்தது. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு மயங்கிய நிலையில் புருஷோத்தமன் கீழே விழுந்து கிடந்தார். அவரை ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்து விட்டு ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறினார்கள்.

அவர் சாப்பிட்ட பரோட்டா தொண்டையிலேயே சிக்கியபடி இருந்தது. போனில் பேசியபடி சாப்பிட்டதால் புரோட்டா தொண்டையில் சிக்கிக் கொண்டதாக டாக்டர்கள் கூறினார்கள்.

தலைப்புச்செய்திகள்