Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உச்சத்தில் மதுவிற்பனை - ரூ.31 ஆயிரம் கோடியை தாண்டியது

ஜுலை 05, 2019 07:55

சென்னை: தமிழ்நாட்டில் மதுவிலக்கு படிப்படியாக கொண்டு வரப்படும் என்று கடந்த 2016 தேர்தலில் ஜெயலலிதா அறிவித்தார். அதைத் தொடர்ந்து அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதும் 7896 டாஸ்மாக் கடைகளில் 500 கடைகளை ஜெயலலிதா மூடினார். அதன்பிறகு காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இருந்த கடையின் நேரத்தை பகல் 12 மணி முதல் இரவு 10 மணியாக குறைத்தார்.

 பின்னர் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் ஆனதும் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி 500 டாஸ்மாக் கடைகளை மூடினார். அந்த சமயத்தில் மாநில நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் இருக்க கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் 3231 கடைகள் மூடப்பட்டன. இதை ஈடுகட்டும் வகையில் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் உள்ள மாநில தேதிய நெடுஞ்சாலைகள் வகை மாற்றம் செய்யப்பட்டு மீண்டும் பல மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்பிறகு 1300 கடைகள் மீண்டும் மூடப்பட்டன.

இப்போது தமிழ்நாட்டில் 5198 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இதன்மூலம் தமிழக அரசுக்கு அதிக வருமானம் கிடைத்து வருகிறது. சாதாரண நாட்களில் தினமும் ரூ.70 கோடி கிடைக்கிறது. பண்டிகை நாட்களில் ரூ.100 கோடி வரை வருமானம் வருகிறது.
இதுகுறித்து சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட மதுவிலக்கு ஆயத்தீர்வை கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டிற்கு பீர் ஏற்றுமதி செய்யப்பட்ட வகையில், 2017-2018-ம் ஆண்டு ஈட்டப்பட்ட வருவாய் ரூ.172.98 லட்சம், இந்த வருவாய் 2018-2019-ம் ஆண்டில் ரூ.577.91 லட்சமாக உயர்ந்துள்ளது. மதுபானங்களுக்கான சிறப்புரிமை கட்டணம், உரிமக்கட்டணம், விண்ணப்ப கட்டணம் போன்றவை கடந்த ஏப்ரல் 1-ந்தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.23.35 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும். இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபானங்களின் சிறப்பு கட்டணம் மூலமாக ரூ.22.52 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்த வருவாய் கடந்த ஆண்டு ரூ.11.24 கோடியாக இருந்தது. மது வருவாயை பொறுத்தவரையில் கடந்த ஆண்டு 26,797.96 கோடி ரூபாய் வருவாய் எட்டப்பட்டது. இந்த ஆண்டு 31,157.83 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.


 

தலைப்புச்செய்திகள்