Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மலைப்பாம்பு 30 முட்டைகளுடன் பிடிபட்டது

ஜுலை 06, 2019 03:38

நெல்லை: நெல்லை பாளையங்கோட்டை கக்கன் நகர் அருகே உள்ள கிருபாநகரில் ஒரு மீன் பண்ணை அமைந்துள்ளது. அந்த மீன்பண்ணையில் வளர்க்கப்படும் மீன்கள் நாளுக்கு நாள் குறைந்து வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த மீன்பண்ணை ஊழியர்கள், அருகில் உள்ள முட்புதருக்குள் தேடிப்பார்த்தபோது அங்கு மலைப்பாம்பு நடமாட்டம் இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே நிலைய அலுவலர் வீரராஜா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் நேற்று முன்தினம் இரவு அங்கு சென்றனர். அவர்கள் ஆய்வு செய்தபோது அங்குள்ள பள்ளத்துக்குள் மலைப்பாம்பு பதுங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அருகில் சென்று பார்த்தபோது மலைப்பாம்பு முட்டைகளையிட்டு அடைகாத்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து முட்டைகள் சேதம் அடையாமல் மலைப்பாம்பை பிடிக்க தீயணைப்பு வீரர்கள் திட்டமிட்டனர். அதன்படி, மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். அது 10 அடி நீளமுள்ளதாக இருந்தது. பின்னர் பாம்பு அடைகாத்து வந்த 30 முட்டைகளை பாதுகாப்பாக எடுத்து ஒரு கூடையில் வைத்தனர்.

பின்னர் மலைப்பாம்பு மற்றும் முட்டைகளை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவற்றை வனத்துறையினர் நாங்குநேரி அருகே பொன்னாக்குடியில் உள்ள வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு வனத்துறை கால்நடை மருத்துவ குழுவினர் மலைப்பாம்பையும், அதன் முட்டைகளையும் பரிசோதனை செய்தனர்.

அப்போது பாம்பு முட்டையிட்டு 30 நாட்கள் வரை இருக்கும் என்றும், மேலும் முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளியே வருவதற்கு 20 முதல் 30 நாட்கள் வரை ஆகும் என்றும் தெரியவந்தது. இதையடுத்து அந்த முட்டைகள் பொன்னாக்குடி வனத்துறை அலுவலகத்தில் கால்நடை டாக்டர் பராமரிப்பில் “இன்குபேட்டர்” கருவியில் வைக்கப்பட்டன. குஞ்சுகள் பொரித்து வளர்ச்சி அடைந்த பிறகு அவற்றை களக்காடு மலைப்பகுதியில் விடுவதற்கு ஏற்பாடு செய்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்