Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பால் விலை உயர்த்தப்படும்: எடப்பாடி பழனிசாமி

ஜுலை 06, 2019 03:41

சென்னை : சட்டசபையில் நடைபெற்ற மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை, கால்நடை பராமரிப்பு துறை, பால்வளத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று தி.மு.க. உறுப்பினர் கே.பி.பி. சாமி (திருவொற்றியூர் தொகுதி) பேசினார். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-
 
உறுப்பினர் கே.பி.பி.சாமி:- தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட குரூப்-1 தேர்வில் 24 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டுள்ளன. இதை கோர்ட்டில் டி.என்.பி.எஸ்.சி.யே ஒத்துக்கொண்டுள்ளது. இந்த நிலையில், முதன்மை தேர்வு நடைபெற இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு என்ன நிவாரணம் வழங்கப்போகிறது. கேள்வித்தாள் முறைகேடு பற்றி விசாரிக்க வேண்டும். முதன்மை தேர்வை தள்ளிவைக்க வேண்டும்.

அமைச்சர் ஜெயக்குமார்:- தேர்வுக்கான கேள்வித்தாளை வல்லுனர் குழு தான் தயார் செய்கிறது. எனவே, கேள்வித்தாள் கசிய வாய்ப்பு இல்லை. கோர்ட்டில் அரசு ஒத்துக்கொண்டதாக சொல்கிறார். அந்த செய்தி தவறு. வழக்கை எதிர்கொள்ள தயாராகவே இருக்கிறோம்.

உறுப்பினர் கே.பி.பி.சாமி:- பால் உற்பத்தியாளர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளாக பால் விலை உயர்த்தப்படவே இல்லை. அதை உயர்த்த வேண்டும்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- உறுப்பினர் 4 ஆண்டு காலமாக பால் உற்பத்தியாளர்களுக்கு பால் விலை உயர்த்தப்படவில்லை என்ற ஒரு வினா எழுப்பி இருக்கின்றார். நாங்கள் பால் விலையை உயர்த்துவதற்கு தயாராக இருக்கின்றோம். ஆனால் நீங்கள் போராட்டம் செய்யாமல் இருந்தால், நாங்கள் பால் விலையை நிச்சயமாக உயர்த்துவோம். 

உற்பத்தியாளர்களுக்கு உயர்த்தும் போது, நுகர்வோருக்கும் உயர்த்தி தானே ஆக வேண்டும். பால் உற்பத்தியாளர்களுக்கு அந்த விலையை உயர்த்தி கொடுக்கின்றபோது, அதற்கேற்றவாறு நுகர்வோருக்கு கட்டணம் உயரும். இது உங்களுடைய ஆட்சியிலும் சரி, எங்களுடைய ஆட்சியிலும் சரி, அப்போது தான் இந்த நிர்வாகம் சிறப்பாக நடக்கும்.

இப்போதே நிர்வாகம் நஷ்டத்தில் தான் இயங்கி கொண்டிருக்கிறது. இப்பொழுது நுகர்வோருக்கு வழங்கப்படுகின்ற அந்த கட்டணமும், உற்பத்தியாளர்களுக்கு வழங்குகின்ற கட்டணத்திலும் வித்தியாசம் இருக்கின்றது. 

ஆகவே, இன்றைக்கு உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படுகின்ற விலையிலும், நுகர்வோருக்கு கொடுக்கின்ற விலையிலும் வேறுபாடு இருக்கின்றது. அதனால் தான் இப்போது பல்வேறு கூட்டுறவு சங்கங்கள் நஷ்டத்தில் இயங்கி கொண்டிருக்கின்றன. ஆகவே, இது அரசுனுடைய கவனத்திற்கு ஏற்கனவே விவசாய சங்கங்கள், பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் எல்லாம் கொண்டு வந்திருக்கின்றது. 

அதை பரிசீலித்து கொண்டு இருக்கின்றோம். ஆகவே, பால் உற்பத்தியாளர்களுக்கு விலை உயர்த்தி கொடுப்பதில் எந்தவித ஒரு கஷ்டமும் அரசுக்கு இல்லை. ஆனால் எதிர்க்கட்சிகள் எல்லாம் இதை வைத்துக்கொண்டு அரசியல் செய்வார்கள். ஏனென்றால் நுகர்வோருக்கு விலை உயர்த்த வேண்டும். நுகர்வோருக்கு விலை உயர்த்து கின்ற போது, பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். அப்படி ஒரு கோரிக்கை எதிர்க்கட்சியில் இருந்து வரும். ஆகவே, நீங்களும் இதற்கு சம்மதித்தால் பால் உற்பத்தியாளர்களுக்கு உயர்த்த வேண்டிய தொகையை அரசு நிச்சயமாக உயர்த்தும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

தி.மு.க. கொறடா சக்கரபாணி:- நுகர்வோருக்கு உயர்த்த வேண்டிய பால் விலையை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- பால் உற்பத்தியாளர்களுக்கு விலையை அரசு உயர்த்தி கொடுப்பதிலே எந்தவித தடையும் கிடையாது. அதேவேளையில், நுகர்வோருக்கும் அதை உயர்த்தி தான் ஆக வேண்டும். வேறு வழி கிடையாது. இல்லை என்றால் சங்கம் நஷ்டத்தில் தான் இயங்கும். 

இது நன்றாக உங்களுக்கு தெரியும். எந்த ஆட்சியாக இருந்தாலும், பால் உற்பத்தியாளர்களுக்கு விலை உயர்வு கொடுக்கின்ற போது, அதற்கு ஏற்றவாறு நுகர்வோர்களுக்கும் அந்த கட்டணத்தை அவர்களிடத்தில் இருந்து பெற்று தந்தால் தான் அந்த சங்கம் சிறப்பாக செயல்பட முடியும். இல்லை என்றால் நஷ்டத்திற்கு வந்துவிடும். நான் ஏற்கனவே, சேர்மனாக மூன்றாண்டு காலம் இருந்தேன். அதனால் சொல்கிறேன். ஆகவே, இன்றைக்கு பால் உற்பத்தியாளர்களுக்கு விலை உயர்த்தி கொடுப்பதிலே எந்தவித சங்கடமும் அரசுக்கு இல்லை. உயர்த்தி கொடுப்பதற்கு அரசு தயாராக இருக்கின்றது.

நம்முடைய சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்ததுமே பால் உற்பத்தியாளர்களுக்கு விலை உயர்த்தி கொடுக்கப்படும். அதேபோல, நுகர்வோருக்கு வழங்கப்படுகின்ற பாலினுடைய விலையும் உயர்த்தி கொடுத்தால் தான் சங்கம் சிறப்பாக செயல்படும். ஏனென்றால் பல லட்சம் பேர் பால் உற்பத்தியில் ஈடுபட்டு இருக்கின்றார்கள். ஆகவே, அவர்களுடைய வாழ்வு மலர, இருக்கின்ற சூழ்நிலையை நீங்கள் சொன்னீர்களே, குடிதண்ணீர் கூட இல்லை, பராமரிப்பு செலவும் அதிகமாகிவிட்டது. இன்றைக்கு அந்த கால்நடைகளுக்கு வழங்க வேண்டிய உணவுப்பொருள், தவிடு, புண்ணாக்கு, பருத்திக்கொட்டை ஆகிய கால்நடை தீவனங்களின் விலை எல்லாம் உயர்ந்துவிட்டதன் காரணத்தினாலே அவர்கள் கோரிக்கை வைத்திருக்கின்றார்கள்.

ஆகவே, அவர்களுடைய கோரிக்கைகள் அரசினுடைய பரிசீலனையில் இருந்து கொண்டு இருக்கின்றது. உறுப்பினர் சக்கரபாணி சொன்னதைப் போல, இன்றைக்கு அவருடைய நிலையை கருதி, அ.தி.மு.க. அரசு பால் உற்பத்தியாளர்களுக்கு விலை உயர்த்தும். அதேபோல, நுகர்வோர்களுக்கு வழங்கப்படுகின்ற அந்த பாலினுடைய விலையும் உயர்த்தி, யாருக்கும் நஷ்டமில்லாமல் சிறப்பாக கூட்டுறவு சங்கங்கள் நடைபெற வேண்டும். அதேபோல பொதுமக்களும் பாதிக்கப்படாத அளவுக்கு அரசு செயல்படும். நடவடிக்கை எடுக்கப்படும் என பேசினார்.
 

தலைப்புச்செய்திகள்