Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வைகோ, வில்சன், சண்முகம் வேட்புமனு தாக்கல்

ஜுலை 06, 2019 07:01

சென்னை : மாநிலங்களவையில் காலியாகும் 6 இடங்களுக்கு வரும் 18-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. எம்.எல்.ஏ.க்களின் பலத்தின் அடிப்படையில், திமுக மற்றும் அதிமுகவுக்கு தலா 3 இடங்கள் கிடைக்கும்.

மக்களவை தேர்தலில் செய்து கொண்ட ஒப்பந்தப்படி மதிமுகவுக்கு ஒரு மாநிலங்களவை எம்.பி சீட்டை, திமுக ஒதுக்கியது. திமுக சார்பில் வில்சன் மற்றும் சண்முகம் போட்டியிடுகின்றனர். மதிமுக சார்பில் வைகோ போட்டியிடுகிறார். இதற்கிடையே, தேசத்துரோக வழக்கில் வைகோவுக்கு சிறப்பு நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்தது. இதனை அடுத்து, அவர் மேல்முறையீடு செய்யப்போவதாக கோரிக்கை விடுத்ததை அடுத்து, தீர்ப்பை நீதிபதி நிறுத்தி வைத்தார்.

இதனால், அவர் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட தடை எதுவும் இல்லை என்பதால், இன்று அவர் வேட்புமனுவை தாக்கல் செய்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் அவர் வேட்புமனுவை அளித்தார். திமுக வேட்பாளர்கள் வில்சன், சண்முகம் ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
ஸ்டாலின் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் நடந்துள்ளது. 3 பேருமே போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு உள்ளது.

முன்னதாக, திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்து அவர் பேசினார். அப்போது, நேற்றைய தீர்ப்பு குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். 1978-ம் ஆண்டு திமுக சார்பில் மாநிலங்களவைக்குச் சென்ற வைகோ 1996 வரை எம்.பி.யாக இருந்தார். இதற்கிடையே, 1994-ம் ஆண்டில் திமுகவில் இருந்து வெளியேறி மதிமுகவை அவர் தொடங்கினார்.

1998-2004-ம் ஆண்டில் அவர் சிவகாசி தொகுதி மக்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். இந்நிலையில், 23 ஆண்டுகளுக்குப் பின் வைகோ மாநிலங்களவைக்குச் செல்ல இருக்கிறார்.

தலைப்புச்செய்திகள்