Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மதுரை அருகே கட்டுமான பணியின்போது அடுக்குமாடி இடிந்து 3பேர் பலி

ஜுலை 06, 2019 07:46

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செக்கானூரணி பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் மாதவன். இவர் தனக்கு சொந்தமான இடத்தில் தரை மற்றும் 2 தளங்களுடன் வீடு கட்டி வருகிறார். இந்த பணியில் அய்யம்பட்டி, தேங்கல்பட்டி, கொக்குளம் கிராமங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் காசிநாதன் (வயது45), அவரது மகன் அருண்குமார் (21), பாலு (55) உள்பட 7 பேர் ஈடுபட்டனர்.

அவர்கள் நேற்று மாலை கான்கிரீட் பூச்சு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் கட்டிடத்தின் தரைத்தளம் இறங்கியது. இதனால் முதல் மற்றும் 2-ம் தளம் சரிந்து விழுந்தது. அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த 7 பேரும் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இது குறித்த தகவல் கிடைத்ததும் செக்கானூரணி போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

கலெக்டர் ராஜசேகர், போலீஸ் டி.ஐ.ஜி. ஆனிவிஜயா, போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோர் சம்பவ இடம் வந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். இடிபாடுகளில் சிக்கிய காசிநாதன், அவரது மகன் அருண்குமார், ராஜேஷ், முருகன், கார்த்திக், முத்துப்பாண்டி, பாலு ஆகியோர் ஒருவர்பின் ஒருவராக 11 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டனர்.

அவர்களுக்கு சம்பவ இடத்தில் தயார் நிலையில் இருந்த மருத்துவக்குழுவினர் முதலுதவி அளித்தனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் வழியிலேயே காசிநாதன் பரிதாபமாக இறந்தார். தொடர்ந்து அருண்குமார், பாலு ஆகியோரும் அடுத்தடுத்து இறந்தனர். மற்ற 4 பேருக்கும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தந்தை-மகன் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் வீட்டின் உரிமையாளரான மாதவனை கைது செய்தனர். கட்டிடம் கட்டப்பட்ட இடத்தில் கிணறு இருந்ததாகவும், அதனை மூடிவிட்டு உரிய அனுமதியின்றி கட்டிடம் கட்டப்பட்டு இருப்பதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புச்செய்திகள்