Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மும்பையை மிரட்டும் அதி கனமழை-- எச்சரித்த வானிலை மையம்.. கலக்கத்தில் மக்கள்

ஜுலை 08, 2019 09:37

மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் பல்வேறு இடங்களில் கடந்த 2 நாட்களாக மீண்டும் பலத்த மழை கொட்டி வரும் நிலையில், மும்பை உட்பட பல்வேறு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மராட்டிய மாநில மக்கள் கலக்கமடைந்துள்ளனர். நாட்டின் பொருளாதார தலைநகரான மும்பை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில், கடந்த வாரம் முதல் மழை கொட்டி தீர்த்து வருகிறது. ஒரு மாதத்தில் சராசரியாக பெய்ய வேண்டிய மழை ஒரே வாரத்தில் கொட்டி வருவதால், மகாராஷ்டிர மாநில மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். 

மும்பை உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக முடங்கியுள்ளது. எங்கு பார்த்தாலும் மழை நீர் வெள்ளமாக தேங்கியதால், நடமாட முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இடையே 2 நாட்கள் ஓய்ந்திருந்த கனமழை கடந்த சனிக்கிழமை முதல் மீண்டும் வலுவாக பெய்யத் துவங்கியுள்ளது. மும்பையில் பரவலாக மழை பெய்தாலும் புறநகர் பகுதிகளான தானே, பால்கர், ராய்காட் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. தொடர் கனமழையால் ரயில் மற்றும் சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

தொடர் மழை காரணமாக மும்பை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது இந்நிலையில் அடுத்து வரும் 24 மணி நேரத்தில் மகாராஷ்டிர மாநிலத்தின் பல இடங்களில் அதி கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராய்காட் மற்றும் பால்கர் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், மும்பை மற்றும் தானே மாவட்டத்தின் ஒரு சில இடங்களிலும் இன்று அதிக மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள வானிலை மையம் ஜூலை 9 மற்றும் ஜூலை 10ம் தேதியான நாளை மற்றும் நாளை மறுநாள் என இருநாட்களுமே, ராய்காட், தானே, பால்கர் மற்றும் மும்பை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்