Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பெட்ரோல்-டீசல் விலை ஏற்றம்: ஆம்னி பஸ்-லாரிகள் கட்டணம் உயருமா?

ஜுலை 09, 2019 04:49

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து ஆம்னி பஸ், வாடகை லாரி, ஆட்டோ சங்கங்கள் விரைவில் முக்கிய முடிவை எடுக்க உள்ளன. இதுதொடர்பாக தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் அன்பழகன் கூறியதாவது:-

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு குறித்து ஆம்னி பஸ், சுற்றுலா பயணிகள் வாகன உரிமையாளர்கள் சம்மேளனத்தின் ஆலோசனை கூட்டம் மும்பையில் வருகிற 25, 26, 27 ஆகிய 3 தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டால் அதற்கு ஏற்றார் போல் ஆம்னி பஸ் கட்டண உயர்வு குறித்து விவாதிக்கப்பட உள்ளது. பெட்ரோல்-டீசல் விலை மீண்டும் உச்சத்துக்கு சென்றால் ஆம்னி பஸ்களில் பயண கட்டணம் 10 சதவீதம் வரை உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை (வால்டாக்ஸ் ரோடு) பார்சல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரமேஷ்குமார் கூறியதாவது:-

பெட்ரோல்-டீசல் விலை கடந்த ஆண்டு தொடர்ந்து உயர்த்தப்பட்ட போது, நாங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டோம். எனினும் மத்திய அரசு செவி சாய்க்காததால் லாரி வாடகை கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகினோம்.

தற்போது சாலை பராமரிப்புக்காக பெட்ரோல்-டீசல் மீதான வரி உயர்த்தப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்க முடியாது. ஏனென்றால் சாலை பராமரிப்புக்காக கிலோ மீட்டருக்கு 5 ரூபாய் 50 காசு சுங்க வரியாக வசூலிக்கப்படுகிறது. பெட்ரோல்-டீசல் விலை மேலும் அதிகரித்தால், அனைத்து லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி, வாடகை கட்டணத்தை 10 சதவீதம் வரை உயர்த்துவது குறித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
 

தலைப்புச்செய்திகள்