Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எனது குடும்பத்தினர் அரசியலுக்கு வரமாட்டார்கள்- ஸ்டாலினிடம் வற்புறுத்திய வைகோ

ஜுலை 09, 2019 10:07

சென்னை: எனது குடும்பத்தில் இருந்து யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த வைகோ, “எனது வேட்பு மனு ஏற்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. இருந்தாலும் அனைத்துத் தரப்பு கருத்துகளை கேட்டேன். சுதந்திர இந்தியாவில் நான்தான் தேசத் துரோக வழக்கில் முதன்முதலாக குற்றம் நிரூபிக்கப்பட்டவன். ஆகவேதான், மாற்று ஏற்பாடாக என்.ஆர்.இளங்கோவை நிற்கச் சொல்லி ஸ்டாலினிடம் நானே வற்புறுத்தினேன். ஆனால், எனது வேட்பு மனு ஏற்கப்பட்டது மகிழ்ச்சி.” என்றவரிடம், ‘எம்.பி-யானவுடன் எந்த விஷயத்தில் முதலில் கையிலெடுப்பீர்கள்?' என்று கேட்கப்பட்டது.

அதற்கு, “மாநிலங்களவை நான் ஒரு தனி உறுப்பினர். எனக்கு அவ்வளவு நேரம் கொடுக்கப்படாது. இருந்தாலும், என்னால் இயன்ற வரை நேரம் கேட்டு பேசப் பார்ப்பேன். இந்தியாவின் மதச்சார்பின்மையைக் காக்கவும், தமிழகத்தின் வாழ்வாதாரங்களை காக்கவும் நான் தீர்க்கமாக பேசுவேன். வைகோ போட்டியிட்டால் மட்டுமே சீட் என திமுக சொன்னதால் மதிமுகவுக்குள் அதிருப்தி என சொல்வதில் எந்த உண்மையும் இல்லை.

கட்சியில் எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும் விவாதித்து ஒருமனதாகவே எடுக்கப்பட்டது. மத்திய அமைச்சர் பதவியை ஏற்க மறுத்ததும் தேர்தலில் போட்டியிட மறுத்ததுமே தான் எடுத்த முடிவு. மதிமுகவில் பதவி பெற்றவர்கள்தான் கட்சியை விட்டு சென்றார்கள்; கொள்கைக்காக வந்தவர்கள் கட்சியிலேயே இருக்கிறார்கள்.

நிச்சயமாக எனக்கடுத்து எனது வாரிசுகளோ குடும்பத்தினரோ அரசியலுக்கு வரமாட்டார்கள். அதனை உறுதியாகக் கூறுகிறேன். இதுவரை நானாக கட்சி தொடர்பான எந்த முடிவுகளையும் எடுக்கவில்லை. அனைத்து முடிவுகளையும் கட்சி நிர்வாகிகளை கூட்டியே கலந்தாலோசித்து விட்டு முடிவுகளை அறிவிப்போம்’’ என அவர் தெரிவித்தார். 
 

தலைப்புச்செய்திகள்