Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாணவர்களே இல்லாத அரசுப்பள்ளிக்கு 2 ஆசிரியர்கள் - சத்துணவு பணியாளர்கள்

ஜுலை 10, 2019 04:37

மதுரை: மதுரை  மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை ஊராட்சிக்கு உட்பட்டது, சித்தாதிபுரம் கிராமம். இங்கு 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. ஆனால் அந்த பள்ளியில் மாணவர் சேர்க்கை கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக ஒற்றை இலக்க எண்ணிக்கையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

 இந்தநிலையில் இந்த கல்வியாண்டில் அந்த பள்ளிக்கூடத்தில் ஒரு மாணவர் கூட இல்லை. ஆனால் அப்பள்ளியில் தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர் மற்றும் சத்துணவு பணியாளர்கள் உள்ளனர். 

கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளை மூடக்கூடாது என்று அரசு நடவடிக்கை எடுத்து வரும் வேளையில், இந்த பள்ளியானது மாணவர்கள் இன்றி காத்தாடுகிறது. கிராமத்தில் உள்ள மக்கள் தங்களது குழந்தைகளை அப்பள்ளியில் சேர்ப்பதில்லை. இதனால் பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட பணியாளர்கள் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.
அரசு பள்ளிகள் செயல்படுவதற்காக பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி, அதிகாரிகள் செயல்படுத்தினாலும் கிராம மக்களுடைய ஒத்துழைப்பு இருந்தால் தான் பள்ளி செயல்படும் என்று கல்வி அதிகாரிகள் கூறுகின்றனர்.

சித்தாதிபுரம் மதுரை மாவட்ட மேற்கு எல்லையில் அமைந்துள்ள ஊராகும். அங்கு பஸ் வசதி கூட இல்லை. இதனால் பக்கத்து கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் கூட இந்த பள்ளிக்கு வந்து சேருவது இல்லை. வட்டார கல்வி அலுவலர், வட்டார வளமைய மேற்பார்வையாளர், ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் இப்பள்ளியை ஆய்வு செய்தார்களா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. முறையாக ஆய்வு செய்திருந்தால் இப்பள்ளி மாணவர்கள் இல்லாமல் செயல்பட்டு இருக்காது என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிக்கூடம் திறந்து ஒரு மாதத்துக்கும் மேலாகிவிட்ட நிலையில், மாணவர்களே இல்லாத பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்பட 2 ஆசிரியர்கள், சத்துணவு பணியாளர்கள் பணியாற்றுவதால் அரசு பணம் வீணாகும் நிலை உள்ளது. அதே நேரத்தில் போதிய ஆசிரியர்கள் இல்லாமல் எத்தனையோ அரசு பள்ளிகள் செயல்படுகின்றன. எனவே அந்த ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழாமல் இல்லை. எனவே இனியாவது அதிகாரிகள் இந்த பள்ளிக்கூட விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் மக்கள் கூறுகிறார்கள்.

தலைப்புச்செய்திகள்