Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மும்பை ஓட்டலுக்குள் கர்நாடக மந்திரி சிவக்குமார் செல்ல போலீசார் அனுமதி மறுப்பு

ஜுலை 10, 2019 05:20

மும்பை: மும்பை ஓட்டலுக்குள் கர்நாடக மந்திரி சிவக்குமார் செல்ல போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். கர்நாடக சட்டசபையில் மொத்தம் 224 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில், சபாநாயகரை தவிர்த்து, காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணிக்கு 118 உறுப்பினர்கள் உள்ளனர்.  எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாவுக்கு 105 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 11 பேர், ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த 3 பேர் என 14 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து சபாநாயகர் அலுவலகத்தில் கடிதம் கொடுத்தனர். இவர்கள் தனி விமானம் மூலம் மும்பை அழைத்து செல்லப்பட்டு அங்குள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர்.

கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா பற்றி சபாநாயகர் முடிவு எதுவும் எடுக்கவில்லை.  இதுபற்றி அவர் கூறும்பொழுது, சில விதிகளின்படி முடிவுகள் எடுக்கப்படும்.  அதற்கு நான் பொறுப்பேற்க வேண்டும்.  இந்த முடிவை எடுப்பதற்கு காலவரை எதுவும் இல்லை என கூறியுள்ளார்.

இதனிடையே சபாநாயகர் சந்திப்புக்கு பின் காங்கிரஸ் கட்சியின் சட்டசபை தலைவர் சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, அரசின் நிலைத்தன்மையை சீர்குலைப்பது என்பது பா.ஜ.க.வின் வழக்கம்.  மக்கள் எங்களுக்கு அதிக வாக்குகளை அளித்துள்ளனர்.  காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம் (எஸ்) ஆகிய இரு கட்சிகளுக்கு இணைந்து 57 சதவீதத்திற்கு கூடுதலான வாக்குகள் கிடைத்துள்ளன.

இந்த முறை பா.ஜ.க. அணி மட்டுமின்றி, தேசிய அளவிலான தலைவர்களான அமித் ஷா மற்றும் திரு.மோடி ஆகியோரும் கர்நாடக அரசியல் விவகாரத்தில் தொடர்பு கொண்டுள்ளனர்.  அவர்களது உத்தரவின்பேரிலேயே அரசை கவிழ்க்க முயற்சிகள் நடந்து வருகின்றன.  இது ஜனநாயகம் மற்றும் மக்களின் தீர்ப்புக்கு எதிரானது.  அவர்கள் பணம், பதவி, மந்திரி அந்தஸ்து ஆகியவற்றை தருகிறோம் என கூறுகின்றனர்.

இதனிடையே கர்நாடக மந்திரி சிவக்குமார் மும்பைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.  மகாராஷ்டிர மாநில ரிசர்வ் போலீஸ் படை மற்றும் கலக கட்டுப்பாட்டு போலீசார் வன்முறை சம்பவங்களை தடுக்க மும்பையிலுள்ள ரினைசன்ஸ் ஓட்டலின் முன் குவிக்கப்பட்டு உள்ளனர். 

இதுபற்றி மந்திரி சிவக்குமார் மும்பையில் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, மும்பை போலீசார் அல்லது வேறு எந்த படைகளும் குவிக்கப்படட்டும்.  அவர்களது பணியை அவர்கள் செய்யட்டும்.  நாங்கள் எங்களின் நண்பர்களை சந்திக்க வந்துள்ளோம்.  அரசியலில் ஒன்றாக பிறந்தவர்கள் நாங்கள்.  ஒன்றாகவே அரசியலில் இறப்போம்.  அவர்கள் எங்களது கட்சிக்காரர்கள்.  அவர்களை சந்திக்க நாங்கள் வந்துள்ளோம் என கூறினார். 
 
 

தலைப்புச்செய்திகள்