Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாங்கள் தலையிட கூடாதா? கை கட்டி கொள்ள வேண்டுமாள்: உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

ஜுலை 12, 2019 08:20

டெல்லி: காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த, 10 அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்கள் ராஜினாமா கடிதத்தை கர்நாடக சபாநாயகர் உடனடியாக ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். விசாரித்த உச்ச நீதிமன்றம் 10 எம்எல்ஏக்களும் சபாநாயகரை நேரில் சந்தித்து அவரிடம் ராஜினாமா கடிதங்களை கொடுக்க உத்தரவிட்டது. அதையேற்று, அவர்கள் நேற்று ராஜினாமா கடிதங்களை கொடுத்தனர். 

ஆனால் இதுவரை அவர்கள் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்கவில்லை. இந்த நிலையில் எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கு விசாரணை மீண்டும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது எம்எல்ஏக்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதிட்டார். சபாநாயகர் சார்பில் காங்கிரஸ் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வி வாதிட்டார். கர்நாடக முதல்வர் சார்பில், ராஜீவ் தவான் ஆஜராகி வாதிட்டார். ராஜினாமா செய்துள்ள இந்த எம்.எல்.ஏ.க்களின் நோக்கம் உள்நோக்கம் கொண்டது. அவர்கள் மீது ஏற்கனவே சபாநாயகரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, தங்களின் தகுதியிழப்பைத் தவிர்க்க ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளனர்.

 கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார், சட்டமன்றத்தின் மிக மூத்த உறுப்பினர், அவருக்கு அரசியலமைப்பு சட்டம் நன்கு தெரியும். அவரை இழிவுபடுத்துவதை ஏற்க முடியாது. சபாநாயகர் முடிவெடுக்க யாரும் நிர்பந்தம் செய்ய முடியாது. முகுல் ரோஹத்கி: சில சூழ்நிலைகளை தவிர, மற்ற விஷயங்களில் நீதிமன்றத்திற்கு சபாநாயகர் பதிலளிக்க கடமைப்பட்டவர். சில பிரிவுகள் மற்றும் விதிகளின் கீழ்தான் சபாநாயகருக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. ராஜினாமா விஷயத்திற்கும் சபாநாயகரின் அதிகாரங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ராஜினாமா கடிதங்களில் எம்எல்ஏக்கள் எழுதிய, 10 வரிகளைப் படிக்க 10 வினாடிகள்தான் ஆகும், ஆனால் சபாநாயகர் அதை இரவு முழுவதும் படிக்கப்போவதாக கூறுகிறார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், "கர்நாடக அரசியல் விவகாரத்தில், உச்சநீதிமன்றம் தலையிட கூடாது என சபாநாயகர் நினைக்கிறாரா. நாங்கள் கையை கட்டிக் கொண்டு நடப்பதை பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும் என சபாநாயகர் நினைக்கிறாரா" என்று கேள்வி எழுப்பினார். 

ராஜினாமா குறித்து சபாநாயகர் முடிவு செய்தாரா இல்லையா என்றும் தலைமை நீதிபதி கேட்டார். முகுல் ரோஹத்கி பதிலளிக்கையில், "இல்லை.. அவர் முடிவு எடுக்கவில்லை" என்றார். முகுல் ரோஹத்கி மேலும் கூறுகையில், "ராஜினாமா கடிதம் நிலுவையில் இருப்பதால் அவர்கள் எம்.எல்.ஏ.க்களாக தொடருகிறார்கள். அவர்கள் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். அதுதான் அவர்கள் திட்டம். எனவே, நீதிமன்றம் திங்கள்கிழமை வரை கூட சபாநாயகருக்கு நேரம் கொடுக்கலாம். ஆனால், நடுவே, எம்எல்ஏக்கள் மீது தகுதிநீக்க நடவடிக்கைகளை சபாநாயகர் எடுக்க கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும்" என்று வாதிட்டார் அவர். ராஜீவ் தவான் வாதிடுகையில், சபாநாயகர் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விஷயத்தில் உள்நோக்கத்தோடு நடந்து கொள்வதாக கூறுவதை ஏற்க முடியாது. ஒவ்வொரு எம்எல்ஏக்களையும் சந்தித்து, விசாரிக்க அவர் நேரம் ஒதுக்கியுள்ளார் என வாதிட்டார்.

தலைப்புச்செய்திகள்