Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இடைநீக்கம் செய்யப்பட்ட சேலம் சிறை வார்டன் வெட்டிக்கொலை

ஜுலை 12, 2019 11:49

சேலம்: சேலம் சோளம்பள்ளம் அருகே உள்ள அய்யம் பெருமாம்பட்டி புது ரோட்டை சேர்ந்தவர் பச்சமுத்து. இவரது மகன் மாதேஷ் (வயது 28). சேலம் மத்திய சிறை வார்டனாக இருந்த மாதேஷ் சூரமங்கலத்தை சேர்ந்த செல்வம், நரசோதிப் பட்டியை சேர்ந்த சங்கர் கணேஷ் ஆகியோருக்கு சொந்தமான 2 கார்களை முன் விரோதம் காரணமாக கடந்த ஆண்டு எரித்தார்.

இது குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாதேசை கைது செய்தனர். மேலும் நாமக்கல்லை சேர்ந்த முதியவர் ஒருவரிடமும் நகை பறித்த வழக்கில் மாதேஷ் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் கடந்த ஜனவரி மாதம் 19-ந் தேதி மாதேஷ் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பின்னர் மாதேஷ் சிறை நிர்வாகம் மூலம் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.இது குறித்து ஐகோர்ட்டில் முறையிட்டதை அடுத்து குண்டர் தடுப்பு சட்டத்தில் இருந்து மாதேஷ் வெளியே வந்தார். பின்னர் சேலத்தை அடுத்த ஆண்டிப்பட்டி பகுதியில் மீன் பண்ணை நடத்தி வந்தார்.

நேற்று அந்த மீன் பண்ணை அருகே நண்பர் வெங்கடேஷ் என்பவருடன் மாதேஷ் சென்ற போது மாதேசை 8 பேர் கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டி கொன்றது.தகவல் அறிந்த மாநகர துணை கமி‌ஷனர் தங்கதுரை , இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமிரா பதிவுகளையும் ஆய்வு நடத்தினர்.

போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-

சிறை வார்டன் மாதேஷ் சிறைக்கு வந்த ரவுடிகளுடன் பழக்கத்தை ஏற்படுத்தியதுடன் கைதிகளுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்து வந்தார். மேலும் குற்றச்செயல்களில் ஈடுபடுவதுட ன் ரவுடிகளுடன் கைகோர்த்து விபசார கும்பலிடமும் பணம் பறிக்கும் செயல்களிலும் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. அழகு நிலையங்களில் வேலை பார்க்கும் பெண்களை மிரட்டி பணம் பறிக்கும் செயலிலும் ஈடுபட்டு வந்த அவர் அவர்களை மிரட்டி விபசார தொழிலிலும் ஈடுபடுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக சேலத்தை சேர்ந்த விபசார பெண் புரோக்கருடன் மாதேசுக்கு தகராறு ஏற்பட்டது.

இது குறித்து அதே பகுதியை சேர்ந்த ரவுடி டேவிட் என்பவரிடம் அந்த பெண் புரோக்கர் மாதேஷ் தன்னிடம் தகராறில் ஈடுபடுவது குறித்து கூறி உள்ளார். இது குறித்து டேவிட், மாதேசிடம் கேட்ட போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அந்த பெண்ணை பழி வாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவரது வீட்டில் நிறுத்தி இருந்த 2 கார்களுக்கு தீ வைத்ததும், அந்த காரின் உதிரி பாகங்களை கழற்றி விற்றதும் அது தொடர்பாக அன்னதானப்பட்டி போலீசார் அவரை ஏற்கனவே கைது செய்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

இந்த நிலையில் மாதேஷ் கொலை செய்யப்பட்டதால் ரவுடி டேவிட் தலைமையிலான கும்பல் மற்றும் ஜங்சன் பகுதியை சேர்ந்த அந்த பெண் புரோக்கருக்கும் கொலையில் தொடர்பு இருப்பதாக போலீசார் கருதுகிறார்கள். அவர்களை தேடிய போது அனைவரும் தலைமறைவாகி இருப்பது தெரிய வந்தது. அவர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

தலைப்புச்செய்திகள்