Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட டிஆர்எஸ் தலைவர் ஸ்ரீனிவாசராவ் படுகொலை

ஜுலை 12, 2019 03:02

தெலுங்கானா: தெலுங்கானாவில் மாவோயிஸ்டுகளால் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட, ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியை சேர்ந்த தலைவர்களில் ஒருவரான நல்லூரி ஸ்ரீனிவாசராவ் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது சடலம் சத்திஸ்கர் மாநிலத்திலுள்ள சுக்மா மாவட்டத்தின் புட்டபாடு கிராமத்தில், இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டம் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியைச் சேர்ந்த தலைவரும், முன்னாள் எம்.பி.டி.சி உறுப்பினர் ஸ்ரீனிவாசராவை மாவோயிஸ்டுகள் கடந்த திங்கட்கிழமை நள்ளிரவிற்கு மேல் கடத்தி சென்றுள்ளனர். 

 விளை நிலங்களை குத்தகைக்கு எடுத்து பயிரிடும் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக, ஸ்ரீனிவாசராவை கடத்தி சென்றிருப்பார்கள் என்று சந்தேகம் கூறப்பட்டது. ஸ்ரீனிவாசராவ் வசிக்கும் பகுதியில் விளைநிலங்களில் பயிரிடுவது குறித்து, மலைவாழ் மக்களுக்கும் அங்குள்ள தலைவர்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும் என தெரிகிறது. ஒவ்வொரு ஆண்டும் மலைவாழ் இன மக்களுக்குச் சொந்தமான சுமார் 100 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து கொண்டு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மலைவாழ் மக்களின் விளைநிலங்களை 5 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து, ஸ்ரீனிவாசராவ் பருத்தி மற்றும் நெல் உள்ளிட்டவற்றை பயிரிட்டு வந்துள்ளார். 

இந்நிலையில் விவசாய விவகாரத்தில் சிலருடன் ஸ்ரீனிவாசராவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அது பெருந்தகராறில் முடிந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் சுமார் 20-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் ஸ்ரீனிவாசராவை அவரது வீட்டிற்குள் நுழைந்து அதிரடியாக கடத்தி சென்றுள்ளனர். கடத்தலை தடுக்க முயன்ற ஸ்ரீனிவாசராவின் மனைவி துர்கா மற்றும் மகன் பிரவீனை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் ஸ்ரீனிவாசராவிற்கு சொந்தமான மோட்டார் சைக்கிளையும் மாவோயிஸ்டுகள் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. கடந்த 3 நாட்களாக கடத்தப்பட்ட ஸ்ரீனிவாசராவின் நிலையை என்வென்றே தெரியாத சூழலில், படுகொலை செய்யப்பட்டு சத்திஸ்கர் மாவட்டத்தில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புச்செய்திகள்