Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் சட்டம் ஒழுங்குக்கு முக்கியத்துவம் தர வேண்டும்: தலைமைச் செயலாளர்

ஜுலை 13, 2019 05:11

தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள சண்முகம், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பதை நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். ஒருங்கிணைந்த மேம்பாட்டுக்கும், மிகச் சிறந்த மக்கள் சேவைக்கும் வளர்ச்சி திட்டங்களே ஆதாரம் என குறிப்பிட்டுள்ள அவர், மாநில நிர்வாகத்தின் விழிகளாகவும், செவிகளாகவும் மாவட்ட ஆட்சியர்கள் திகழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதிலும், மக்களின் கருத்து மற்றும் தேவைகளை அறிந்து அரசுக்கு தெரிவிப்பதில் ஆட்சியர்கள் முக்கியப் பங்காற்றுவதாகவும் தலைமைச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியின் மூலமே ஏழைகளின் சமூக பொருளாதாரத்தை உயர்த்த முடியும் எனக் கூறியுள்ள அவர், கிராமப்புறங்களுக்கு அடிக்கடி சென்று மக்களை சந்தித்து, அவர்களது குறைகளைத் தீர்க்க முக்கியத்துவம் தர வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

வேளாண்மை மற்றும் அவை சார்ந்த துறைகளின் மேம்பாட்டிற்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும், அரசு திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடைவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும், தலைமைச் செயலாளர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

சுகாதாரம், கல்வி, வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பு, உள்ளிட்டவை முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்தும் மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

நீர்நிலைகளை தூர்வாரும் குடிமராமத்து திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்றும், முக்கியமாக சட்டம் ஒழுங்கு பராமரிப்புக்கு, மாவட்ட ஆட்சியர்கள் கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் அக்கடிதத்தில் தலைமைச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.
 
 

தலைப்புச்செய்திகள்