Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நிர்மலா சீதாராமனை பாராட்டிய காங்., தலைவர்கள்

ஜுலை 14, 2019 07:12

புதுடில்லி: நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன்,பட்ஜெட் தாக்கல் செய்த பின், இது தொடர்பான விவாதம் பார்லிமென்டின் இரு சபைகளிலும் நடைபெற்றது.

ராஜ்யசபாவில், முன்னாள் நிதியமைச்சர், சிதம்பரம் பேசுவதற்கான முறை வந்த போது, நிர்மலா இல்லை .உடனே , காங்., - எம்.பி.,க்கள் , 'சிதம்பரத்தின் பேச்சை நிதி அமைச்சர் கேட்க வேண்டும்; எங்கே போய்விட்டார் அவர்'என, கேள்வி எழுப்பினர்.

ஓய்வறையில் இருந்த நிர்மலாவுக்கு தகவல் பறந்தது; 'அவர் பேசட்டுமே; யார் அவரைத் தடுப்பது'என, கூறியபடி, சபைக்கு சென்றார். நிர்மலா, சபைக்கு வந்த பிறகு, பேச்சை ஆரம்பித்தார் சிதம்பரம். பட்ஜெட்டில் அது சரியில்லை ; இது சரியில்லை என, கடுமையாக விமர்சித்தார். நீண்ட உரைக்கு பின், பேச்சை முடித்த சிதம்பரம், நிர்மலாவின் இருக்கைக்கு அருகே சென்றார். 'நீங்கள் பதில் சொல்லும் போது, நான் சபையில் இருக்க மாட்டேன் . சென்னையில், ஸ்டாலின் தலைமையில், ஒரு புத்தக வெளியீட்டு விழாவிற்கு ஏற்கனவே ஒப்புக்கொண்டு உள்ளேன் ... சாரி' என்றாராம், சிதம்பரம்.

மறுநாள், பட்ஜெட் விவாதத்திற்கு பதில் அளித்து பேசினார், நிர்மலா. 'முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரத்திடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். அவரை பாராட்டுகிறேன் ' என, பேச்சை ஆரம்பித்தார் நிர்மலா. 'சிதம்பரத்தை பாராட்டுகிறாரே ' என, காங்., - எம்.பி.,க்கள் உற்சாகமடைந்தனர். பேச்சை தொடர்ந்த நிர்மலா, 'ஒரு நிதி அமைச்சர், என்னென்ன விஷயங்களை செய்யக் கூடாது என்பதை , சிதம்பரத்தை பார்த்துதான் கற்றுக் கொள்ள வேண்டும். 'அப்படித் தான், எனக்கு சிதம்பரம் உதவி செய்திருக்கிறார்'என, நிர்மலா கூறியதும், பா.ஜ., - எம்.பி.,க்கள் மேஜையை தட்டி ஆர்ப்பரிக்க நிலவரம் புரிந்து, அமைதியாயினர், காங்., -எம்.பி.,க்கள் .பட்ஜெட்விவாதத்திற்கு பதில் அளித்த கையோடு, சிதம்பரத்தையும் ஒரு வழியாக்கிவிட்டார், நிர்மலா.

'நல்லவேளை , சபையில், சிதம்பரம் இல்லை ' என, காங்., -எம்.பி.,க்கள் ஆறுதல்பட்டனர். விஷயம் அத்துடன் முடியவில்லை . சிதம்பரம் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்ததற்காக, நிர்மலாவின் இருக்கைக்கு சென்று பாராட்டினார், காங்., மூத்த தலைவர், மோதிலால் வோ ரா. முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷும், நிர்மலாவுக்கு பாராட்டு தெரிவிக்க , காங்., - எம்.பி.,க்கள் நொந்து போய்விட்டனர்.

தலைப்புச்செய்திகள்