Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பஸ்- கார் மோதல்: மில் தொழிலாளிகள் 4 பேர் பலி

ஜுலை 14, 2019 11:46

கோவை: கோவை சூலூரை சேர்ந்த மில் தொழிலாளிகள் 6 பேர் காரில் நேற்று இரவு காரைக்கால் புறப்பட்டனர். கார் வெள்ளகோவில் அடுத்த ஒத்தக்கடை பிரிவு என்ற இடத்தில் சென்ற போது திருச்சியில் இருந்து திருப்பூருக்கு அரசு பஸ் வந்தது. இந்த பஸ் முன்னாள் சென்ற வாகனத்தை முந்திச்செல்ல முயன்றபோது கார் மீது மோதியது. இதில் கார் நொறுங்கியது. காரில் பயணம் செய்த சூலூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த முரளிகண்ணன் (வயது 33). நெல்லை நாங்குநேரி களக்காடு பகுதியை சேர்ந்த நாகராஜ் (29), அதே பகுதியை சேர்ந்த சுந்தரேசன் (25), சொர்ணமூர்த்தி (20) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

சூலூர் ரங்கநாதபுரத்தை சேர்ந்த சுரேஷ் (35), பல்லடத்தை சேர்ந்த பாலச்சந்திரன் (35) மற்றும் பஸ்சில் பயணம் செய்த திருப்பூர் நல்லூர் சபரி பிரியா நகரை சேர்ந்த மாரிமுத்து (52) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து வெள்ளகோவில் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். காங்கயம் டி.எஸ்.பி. செல்வம், வெள்ளகோவில் இன்ஸ்பெக்டர் ஜெயபாலன் ஆகியோர் தலைமையிலான போலீசார் தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்துக்கு சென்றனர். அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியான 4 பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காரில் சென்ற மில் தொழிலாளிகளின் நண்பர் புதுச்சேரியில் உடல்நலம் சரியில்லாமல் உள்ளார். அவரை பார்க்க புறப்பட்டபோது இந்த கோர விபத்து நடந்தது முதல் கட்டவிசாரணையில் தெரியவருவதாக போலீசார் கூறினர். பஸ்சை ஓட்டி வந்த கரூர் கிளையை சேர்ந்த முருகானந்தன் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


 

தலைப்புச்செய்திகள்