Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மனித சங்கிலி போராட்டம்

ஜுலை 17, 2019 10:54

புதுச்சேரி: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மனித சங்கிலி போராட்டம் புதுச்சேரியில் நடைப்பெற்றது. அண்ணாசிலையிலிருந்து காமராஜர் சிலை வரை நடந்த மனிதசங்கிலி போராட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, எம்.எல்.ஏ.க்கள் ஜெயமூர்த்தி, விஜயவேணி, சிவா, வெங்கடேசன் உள்பட பலரும் பங்கேற்றனர். இதுகுறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசு புதுவை மாநிலத்தில் நிலம் மற்றும் கடலில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக வேதாந்தா, ஓ.என்.ஜி.சி. நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் எனக்கு கடிதம் எழுதி இருந்தார்.

இதை எதிர்த்து நான் பிரதமருக்கு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்தினால் விவசாயிகளும், மீனவர்களும் பாதிக்கப்படுவர். சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படும். எனவே மக்களுக்கு எதிரான திட்டங்களை எக்காரணத்தை கொண்டும் அனுமதிக்க மாட்டோம் என கடிதம் எழுதினேன். மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர், உங்கள் கோரிக்கை குறித்து பரிசீலிப்பதாக எனக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கண்டித்து தமிழகம், புதுவையில் பலகட்ட போராட்டங்கள் நடந்து வருகிறது. தற்போது மனித சங்கிலி போராட்டம் நடத்துகிறோம்.

எக்காரணத்தை கொண்டும் மக்களுக்கு எதிரான எந்த திட்டத்தையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இதனால் எந்த விளைவு வந்தாலும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம். சட்டசபை கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படும் என அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்