Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

என் கணவர் ஆத்மா சாந்தியடையாது: ஜீவஜோதி ஆவேச பேட்டி

ஜுலை 19, 2019 06:10

சென்னை: என் கணவரை கொலை செய்த வழக்கில் சரவண பவன் ராஜகோபால் ஒரு நாள் கூட சிறைக்கு செல்லாமல் உயிரிழந்து இருப்பது ஆறாத வடுவாக உள்ளது என ஜீவஜோதி தெரிவித்துள்ளார். சரவண பவன் உணவக உரிமையாளர் ராஜகோபால் நேற்று உடல்நலக்குறைவால் சிகிச்சை பலன் இன்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். 

 அங்கு கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ராஜகோபால் நேற்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இதனால் ஒரு நாள் கூட சிறைக்கு செல்லக்கூடாது என்ற வைராக்கியத்துடன் இருந்த ராஜகோபால், சிறைக்கு செல்லாமலேயே உயிரைவிட்டு விட்டார்.   இந்நிலையில் ராஜகோபால் இறந்த பின்னர் கொல்லப்பட்ட பிரின்ஸ் சாந்தகுமாரின் மனைவி செய்தியாளர்களூக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "நான் பிரின்ஸ் சாந்தகுமாரை உயிருக்கு உயிராக நேசித்து திருமணம் செய்தேன். அவருடன் சந்தோசமாக வாழ்ந்து வந்தேன். ஆனால் சரவண பவன் உணவக உரிமையாளர் ராஜகோபால் என்னை மூன்றாவது திருமணம் செய்ய விரும்பி பல தொல்லைகள் கொடுத்தார். அதையும் மீறித்தான் நான் என் கணவருடன் வாழ்ந்து வந்தேன். ஆனால் ராஜகோபால் அடியாட்களை அனுப்பி என் கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை கடத்தி மலை அடிவாரத்தில் வைத்து கொன்றுவிட்டார். 

 சிறுவயதிலேயே எனக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பால் அதிர்ச்சி அடைந்தேன். இதனால் ராஜகோபாலுக்கு எதிராக புகார் அளித்தேன். பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு நீதிமன்றத்தால் ராஜகோபால் குற்றவாளி என உறுதி செய்ப்பட்டார். ஆனால் ராஜகோபால் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். என்னுடைய நியாயமான போராட்டத்தால் உச்சநீதிமன்றம் ராஜகோபாலின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. அந்த நாளை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன். ஆனால் ஆயுள் தண்டனை பெற்ற ராஜகோபால் உயிரிழந்தது ஒரு வகையில் வருத்தமாக இருந்தாலும், ஒரு நாள் கூட சிறைக்கு செல்லாமல் அவர் உயிரிழந்ததை என்னால் ஏற்க முடியவில்லை. இதனால் என் கணவர் ஆத்மா சாந்தியடையாது. எனக்கு இது ஆறாத வடுவாக உள்ளது" இவ்வாறு கூறினார்.


 


 

தலைப்புச்செய்திகள்