Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழ்மொழியில் நாகரிகம், பண்பாடு பற்றி வெளியிடும் பத்திரிகைகளுக்கு சி.பா.ஆதித்தனார் பெயரில் விருது: தமிழக அரசு

ஜுலை 19, 2019 07:16

சென்னை: தமிழக சட்டசபையில் நேற்று முற்பகல் கேள்வி நேரம் முடிந்ததும், செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, தமிழ் வளர்ச்சி துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினார்கள். உறுப்பினர்களின் கேள்வி களுக்கு பதில் அளித்து செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் ஆகியோர் பேசினர். அப்போது தங்களது துறைகள் சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர்கள் வெளியிட்டனர்.

தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பாண்டிய ராஜன் அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது:-

தமிழ்மொழியில் நாகரிகம், பண்பாடு ஆகியவற்றை போற்றியும், பிறமொழி கலப்பின்றி எழுதியும் வெளியிடப்பட்டு வரும் நாளிதழ், வாரஇதழ் மற்றும் மாதஇதழ் ஆகியவற்றில் ஒவ்வொன்றிலும் ஓர் இதழைத் தெரிவு செய்து ‘தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின்’ பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படும்.

இவ்விருது ஒவ்வொன்றிற்கும் விருதுத் தொகையாக ரூ.1 லட்சமும், கேடயம், பாராட்டிதழ் மற்றும் பொன்னாடையும் வழங்கப்பெறும். இவ்விருதுக்கென தொடர் செலவினமாக ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்படும்.

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் மூலம் மயங்கொலிச் சொல்லகராதி உருவாக்கப்பட்டு எழுதுபொருள் அச்சுத்துறையின் மூலம் அச்சிட்டு வெளியிடப்படும். மேலும், தமிழ் மரபுத்தொடர் அகராதி உருவாக்கப்பட்டு எழுதுபொருள் அச்சுத்துறையின் மூலம் அச்சிட்டு வெளியிடப்படும். செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் மூலம் ‘சொல்வயல்’ என்ற பெயரில் மாதஇதழ் தொடங்கப்படும்.

 இவ்வாறு அவர் பேசினார்.

தலைப்புச்செய்திகள்