Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழக மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும்- முதலமைச்சர் அறிவிப்பு

ஜுலை 20, 2019 10:00

சென்னை: சட்டசபையில் 110-வது விதியின் கீழ் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு அறிக்கை வாசித்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகளில், அவசர பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள 2014-15ஆம் ஆண்டு முதல் ஒரு விடுதிக்கு தலா 15,000 ரூபாய் முன்பணமாக வழங்கப்பட்டு வந்தது. 2018-19-ம் ஆண்டில், 5 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடங்களில் செயல்படும் 99 கல்லூரி விடுதிகளுக்கு இத்தொகை 20,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டது.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத் துறையின் மூலம் பள்ளிப்படிப்பு, பள்ளி மேற்படிப்பு போன்ற கல்வி உதவித் தொகை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேற்கண்ட அனைத்து திட்டங்களிலும் தமிழ்நாட்டிலுள்ள கல்லூரிகளில் பயிலும் தமிழ்நாடு மாணவ, மாணவியர்களுக்கு மட்டுமே கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவ, மாணவியரிடமிருந்து கல்வி உதவித் தொகை கோரி விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. எனவே, பட்டியலிடப்பட்ட மத்திய கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஐ.ஐ.ஐ.டி., என்.ஐ.டி. மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும், மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையாக மாணவர் ஒருவருக்கு 2 லட்சம் ரூபாய் வரை முதற்கட்டமாக 100 மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதற்கு 2 கோடி ரூபாயினை அம்மாவின் அரசு ஒதுக்கீடு செய்து வழங்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தலைப்புச்செய்திகள்