Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அதிமுக அரசு விவசாயிகளின் நலன் காக்கும் அரசாக உள்ளது: எடப்பாடி பழனிசாமி

ஜுலை 21, 2019 08:52

சேலம்: சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ. 24.10 கோடி மதிப்பீட்டில் சிக்கம்பட்டியில் இருந்து துட்டம்பட்டி வரை புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை தாரமங்கலத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டு புதிதாக அமைக்கப்பட்டுள்ள புறவழிச்சாலையை திறந்து வைத்தார்.

மேலும் அவர் ரூ.5.25 கோடி மதிப்பில் கொங்கணாபுரம்- வடகரை வாய்க்கால் கரிமேடு சாலையில் கட்டப்பட்டுள்ள பாலத்தையும், தொளசம்பட்டி சாலையில் கட்டப்பட்டுள்ள பாலத்தையும் திறந்து வைத்து அவர் பேசியதாவது: தாரமங்கலம் புறவழிச்சாலை இன்றைக்கு உங்கள் அனைவரது முன்பாக, கடவுளின் ஆசீர்வாதத்தோடு திறந்து வைக்கிறேன். இதைபோல 2 பாலங்களையும் திறந்து வைத்திருக்கின்றேன். இந்த புறவழிச்சாலை எந்த அளவுக்கு பயனுள்ளது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

சாலை கட்டமைப்பில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது சாலை உட்கட்டமைப்பு மிக முக்கியமானது. எந்த ஒரு மாநிலத்திலும் சாலை உட்கட்டமைப்பு சிறந்து இருக்கின்றதோ, அந்த மாநிலம் தொழில் வளம் சிறந்த மாநிலமாக இருக்கும். அந்த வகையில் நம்முடைய தமிழ்நாடு சாலை மேம்பாடு திட்டத்தில் சிறந்து விளங்குகிறது.

இன்றைக்கு நெடுஞ்சாலை மற்றும் கட்டுமானம், பராமரிப்பு கோட்டத்தின் சார்பாக தாரமங்கலத்தில் ரூ.24 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் 3.110 கி.மீ. நீளமுள்ள இந்த புதிய புறவழிச்சாலை பெரியாம்பட்டியில் தொடங்கி ஓமலூர், சங்ககிரி, திருச்செங்கோடு, பரமத்திவேலூர் சாலை துட்டம்பட்டியில் முடிவடைகிறது.

தொளசம்பட்டியில் ரூ.18.44 கோடியில் ஒரு ரெயில்வே மேம்பாலம், முத்துநாயக்கப்பட்டியில் ரூ.15.94 கோடியில் ஒரு ரெயில்வே மேம்பலாம், ஜெ.எஸ். டபிள்யூ. தொழில்சாலை அருகில் ரூ.19 கோடியில் ஒரு உயர்மட்டமேம்பாலம், குஞ்சாண்டியூரில் ரெயில்வே மேம்பாலம் ஆகவே ஓமலூரில் இருந்து மேட்டூர் வரை இருக்கின்ற ரெயில்வே குறுக்கே இந்த பாலங்கள் எல்லாம் விரைந்து கட்டிக் கொடுத்து மக்களுடைய பயன்பாட்டிற்கு வரும்.

அதுமட்டுமின்றி திருச்செங்கோடு, சங்ககிரி, கொங்காணபுரம், தாரமங்கலம், ஓமலூர் வரை 4 வழிச்சாலையாக இந்த சாலை விரிவுபடுத்தி போக்குவரத்து நெரிசல் அற்ற சாலையாக உருவாக்கிக் தரப்படும்.

இதைபோல் பவானி-மேட்டூர், மேட்டூர்- தொப்பூர் சாலை அகலப்படுத்தி அந்த பகுதியில் இருக்கின்ற வாகனங்கள் தங்கு தடையில்லாமல் செல்வதற்கு வழிவகை செய்யப்படும். இதற்கு மனமிகுந்து பொதுமக்கள் நிலம் கொடுத்தால் தான் சாலை அமைக்க முடியும். போக்குவரத்து நெரிசல் இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்பது தான் எங்களுடைய லட்சியம்.

நம்முடைய ராணுவத்திற்கு தேவையான தளவாடங்களை உற்பத்தி செய்வதற்கான மிகப்பெரிய தொழில்சாலை உருக்காலை வளாகத்தில் உள்ள நிலத்தில் ஒரு பகுதியை பெற்று அமைக்கவும் நாங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கின்றோம்.

இதன் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அதுபோல் குடிமாரமத்து பணிகள் விவசாயிகள் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடைபெறுகிறது. விவசாயிகளின் நலன் காக்கும் அரசாக அ.தி.மு.க. அரசு உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

தலைப்புச்செய்திகள்