Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரூ.3 லட்சம் கொடுத்தால், ரூ.27 லட்சம் பண மோசடி: 7 பேர் கைது

ஜுலை 22, 2019 04:08

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் நந்தியம்பாக்கம் ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் பர்வேஷ். சௌகார்பேட்டையில் செல்போன் சர்வீஸ் கடை வைத்துள்ளார். கடந்த 18-ம் தேதி பர்வேஷ் கடைக்கு வந்த வட இந்திய இளைஞர் ஒருவர் தன்னிடம் சவுதி அரேபியாவின் பணமான ரியால் இந்திய மதிப்பில் 27 லட்சம் ரூபாய் இருப்பதாகவும், அதை மாற்ற முடியாமல் இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், இவ்வளவு பெரிய தொகையை எங்கேனும் மாற்றினால் பிரச்சினையில் அகப்பட்டு விடுவோம் என்று பயப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், பர்வேஷ் இந்திய பணம் ரூபாய் 3 லட்சம் தந்தால் சவுதி ரியால் அனைத்தையும் பர்வேஷுக்கு தந்து விடுவதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கு பர்வேஷ், தன்னிடம் சவுதி அரேபிய ரியாலை காண்பித்தால் மேற்கொண்டு 'டீலிங்' பேசலாம் என்றும் தெரிவித்ததை அடுத்து, திருவான்மியூர் வடக்கு மாட வீதியில் வைத்து ஒரு பை நிறைய சவுதி ரியாலைக் காண்பித்து உள்ளனர்.

இதை பார்த்த பர்வேஷ் 20-ம் தேதி திருவான்மியூர் சென்று 3 லட்சம் கொடுத்து ரியால் வாங்கி வந்துள்ளார். 27 லட்சம் மதிப்பிலான ரியாலை பேப்பரில் மடித்து கொடுத்து உள்ளனர். வீட்டில் வந்து பர்வேஷ் பிரித்து பார்க்கும்போது சில ரியால்களை வைத்து ஒவ்வொரு கட்டின் உள்ளேயும் காகிதங்களை கத்தரித்து வைத்து ஏமாற்றி உள்ளனர்.

இதுதொடர்பாக திருவான்மியூர் காவல் நிலையத்தில் பர்வேஷ் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போலீசார், அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகன எண்ணை வைத்து டெல்லியைச் சேர்ந்த சுமன் என்பவரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சுமன் அளித்த தகவலின் அடிப்படையில், மேற்கு டெல்லியைச் சேர்ந்த அனிக் ஷேக், அனிக் ஷேகின் மனைவி பாத்திமா, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ரபீக், ஜஹீத், பக்கி பேகம், அகிலேமா ஆகியோரைக் கைது செய்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் பல இடங்களில் இது போன்ற மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர். குறிப்பாக உருது பேசும் இஸ்லாமிய வணிகர்களைக் குறிவைத்து மோசடி செய்து வந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பணத்தை எடுத்து தப்பியோடிய முக்கிய குற்றவாளிகளான டெல்லியைச் சேர்ந்த ஜாபர், பிலால் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்