Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்திகளுடன் ரகளையில் ஈடுபட்ட கும்பல் சரணைடைந்தனர்: போலீசார் விசாரணை

ஜுலை 23, 2019 12:03

சென்னை: சென்னை தாம்பரம் அடுத்த  ஆலப்பாக்கத்தில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் பத்து பேர் கொண்ட மர்ம கும்பல் பயங்கர குடிபோதையில் அவர்களது வாகனத்துக்கு பெட்ரோல் போட வந்துள்ளனர். கத்தி, அரிவாள் உள்ளிட்ட கொடூரமான ஆயுதங்களை அவர்கள் மறைத்து வைத்திருந்ததாக தெரிகிறது. அவர்களது வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பிய பின் அங்குள்ள வாடிக்கையாளர்களையும் பெட்ரோல் பங்க் ஊழியர்களையும் தாக்கத் தொடங்கினர்.

அங்கிருந்து போக மறுத்த வாடிக்கையாளர்களை சரமாரியாக கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த காட்சி அங்குள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது. அது கடந்த சில தினங்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ காட்சியில் கேங் லீடர் போல் காட்சி அளிக்கும் ஒருவர், இரண்டு கைகளிலும் ஆயுதங்களை வைத்துக்கொண்டு அங்கிருந்த இளைஞர் ஒருவரை சரமாரியாக தாக்குகிறார். மர்ம நபர்களில் ஒருவரே அவரை தடுத்த போதிலும்  அதனை பொருட்படுத்தாமல் அந்த இளைஞரைத் தாக்கும் காட்சி பதைபதைக்கச் செய்கிறது.

மேலும் பெட்ரோல் பங்க்  உரிமையாளரின் தந்தையையும் அந்த மர்ம கும்பல் விட்டுவைக்கவில்லை. அவரை வெட்ட முயன்றபோது பெட்ரோல் பங்க்கின் உரிமையாளர் வந்து தடுத்ததால் அவர் உயிர்தப்பியுள்ளதாக இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். அவர் மயங்கிய நிலையில் இருந்த போதும் அவரை காலால் எட்டி உதைத்து தாக்கியுள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த பீர்க்கங்கரணை போலீசார் பொதுமக்கள் மீது இந்த கொலைவெறி தாக்குதல் அரங்கேறியது ஏன் என்று தீவிர விசாரணையை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

சென்னை தாம்பரத்தில் சூர்யா மற்றும் உதயா என்று இரண்டு ரவுடி கும்பல் உள்ளது. இதில் உதயா கடந்த 8 மாதங்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். ஆனாலும் அவரின் ஆதரவாளர்கள் மற்றும் சூர்யா தலைமையில் இரண்டு குழுக்கள் இயங்கி வருகிறது. இந்த ரவுடி கும்பல் கடந்த பல ஆண்டுகளாக தனியார் வணிக வளாகங்களில் மாமூல் வாங்குவதையே தொழிலாக செய்து வந்துள்ளது. இதுதான் இந்த கொலைவெறி தாக்குதலுக்கு காரணமாக இருந்துள்ளது.

சம்பவம் நடந்த பெட்ரோல் பங்கில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாமூல் கேட்டு வந்துள்ளனர். பின்னர் மீண்டும் மாமூல் கேட்டு வந்ததால் பெட்ரோல் பங்க் உரிமையாளர் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரவுடி கும்பல் பெட்ரோல் பங்க்கை சூறையாடி அங்கிருந்த வாகனம் மற்றும் கண்ணாடி பொருட்களை அடித்து நொறுக்கினர். இந்தத் தாக்குதலில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த கும்பல் கஞ்சா விற்பனை செய்வதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் சூர்யா மீது 8 கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பதாக  காவல்துறை தரப்பிலிருந்து தெரிவிக்கின்றனர். இந்த சம்பவத்தை நிகழ்த்திய குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் கடந்த செவ்வாய்கிழமை தாக்குதல் நடத்திய 8 பேரும் சரணைடைந்தனர்.

தலைப்புச்செய்திகள்