Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பள்ளி மாணவர்களுக்கான இலவச சைக்கிள் திட்டம் கைவிடப்படுமா?

ஜுலை 24, 2019 03:30

சென்னை: மேல்நிலை கல்வியில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் 2001-2002-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர், 2005-2006-ம் ஆண்டுகளில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகள் பயன் அடையும் வகையில் இந்த திட்டம் மேம்படுத்தப்பட்டது. அதன்படி, பிளஸ்-1 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் திட்டத்தின் கீழ் சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் மாநில நிதிநிலை மீதான தணிக்கை அறிக்கையில் இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்துக்கு 2013-14-ல் ரூ.217 கோடியும், 2014-15-ல் ரூ.218 கோடியும், 2015-16-ம் ஆண்டில் ரூ.235 கோடியும், 2016-17-ல் ரூ.250 கோடியும் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017-18-ம் ஆண்டில் இந்த திட்டத்துக்கு ரூ.16 கோடி மட்டுமே செலவு செய்து இருப்பதாக அதில் கூறப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டுகளில் இந்த திட்டத்துக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டு, தற்போது 2017-18-ம் ஆண்டில் குறைவான நிதி ஒதுக்கப்பட்டதாலும், தற்போதைய பள்ளிக்கல்வி துறையின் கொள்கை விளக்க குறிப்பில் இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் தொடரும் என்று தெரிவிக்காததாலும் இலவச சைக்கிள் திட்டம் கைவிடப்படுகிறது என்ற தகவல் நேற்று வேகமாக பரவியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த துறையின் 2019-20-ம் ஆண்டுக்கான கொள்கை விளக்கக்குறிப்பில் இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்துக்கு நடப்பாண்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

அதில், கடந்த 2017-18 மற்றும் 2018-19-ம் ஆண்டுகளில் 10 லட்சத்து 87 ஆயிரத்து 147 மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கப்பட்டு இருப்பதாகவும், 2019-20-ம் ஆண்டில் இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்துக்கு ரூ.138 கோடியே 48 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் தொடரும் என்றே தெரியவருகிறது.
 

தலைப்புச்செய்திகள்