Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வேலூர் மத்திய சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்தார் நளினி

ஜுலை 25, 2019 05:23

வேலூர்: வேலூர் மத்திய சிறையில் இருந்து 30 நாட்கள் பரோலில் நளினி வெளியே வந்தார். பலத்த பாதுகாப்புடன் அவர் சத்துவாச்சாரியில் உள்ள வீட்டுக்கு அழைத்து செல்லப்படுகிறார். இவர், ரங்காபுரத்தில் உள்ள சிங்கராயன் என்பவரது வீட்டில் தங்கவைக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கராயர் திராவிட இயக்க தமிழர் பேரவையின் துணை பொதுச்செயலாளராக உள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை பெற்று வரும் நளினி தனது மகளின் திருமண தேவைக்காக 6 மாத காலம் பரோல் வேண்டும் எனக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் தாமே வாதாடிய நளினி, எனது மகளுக்காக நான் தற்போது வரை எந்தவொரு சம்பிரதாய சடங்குகளையும் மேற்கொள்ளவில்லை. 

எனவே திருமணத்திற்காக 6 மாதம் பரோல் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார். கடந்த 5-ம் தேதி இந்த மனு விசாரணைக்கு வந்த போது, நளினியின் கோரிக்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. தமிழக அரசின் வாதத்தை ஏற்று நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.  உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, நளினி இன்று பரோலில் வெளியே வந்தார். தற்போது, சத்துவாச்சாரியில் உள்ள சிங்கராயர் என்பவரது வீட்டில் தங்கி தனது மகளின் திருமண ஏற்பாடுகளை செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 30 நாட்கள் அவர் தங்கும் இடங்கள் குறித்த அறிக்கைகள் சிறையில் சமர்பிக்கப்பட்டுள்ளன. 

மேலும் , 24 மணி நேர பாதுகாப்புடன் நளினி பரோலில் இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, பரோல் காலத்தில் ஊடகங்களில் பேட்டி அளிக்கக்கூடாது போன்ற பல்வேறு நிபந்தனைகள் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக, தமிழக அமைச்சரவையின் பரிந்துரை மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை கடந்த ஜூலை 18ம் தேதி நடந்த போது, தமிழக அமைச்சரவையின் பரிந்துரையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்கக்கோரி நீதிமன்றம் உத்தரவிடமுடியாது என்றும், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும் கூறி மனுவை தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்