Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருவாரூரில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய 770 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு

ஜுலை 25, 2019 05:32

திருவாரூர்: திருவாரூரில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய 770 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் விழுப்புரம், கடலூர் மற்றும் டெல்டா  மாவட்டங்களான திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட  மாவட்டங்களில்  ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மேற்கொள்வதற்கு மத்திய அரசு  ஓ.என்.ஜி.சி. மற்றும் வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, உள்ளிட்ட மாவட்டங்களில் 41 இடங்களில் 274 கிணறுகள் தோண்டி எரிவாயு எடுப்பதற்கான பணியில் இறங்கியுள்ளது. இந்த  திட்டம் செயல்படுத்தப்பட்டால் டெல்டா  மாவட்டங்கள் பாலைவனமாக மாறும் என்பதால் இந்த திட்டத்தை உடனே கைவிட வலியுறுத்தி கடந்த ஒரு மாதமாக விவசாயிகளும், பொதுமக்களும் தினந்தோறும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 

காவிரி டெல்டா பகுதிகளில் மத்திய அரசு ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதை கண்டித்தும், டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தியும், போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்கள், விவசாயிகள் மீது வழக்கு பதிவு செய்யும் காவல்துறையை கண்டித்தும், காவிரி படுகை கூட்டமைப்பு சார்பில் பேரணியாக சென்று திருவாருர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்த பேரணியானது விளமல் புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சென்றது. 

பேரணியில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் விவசாயிகள் 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவாறு சென்றனர். இந்நிலையில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டதாக 355 பெண்கள், விவசாயிகள், அரசியல் கட்சி தலைவர்கள் என 770 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபடுதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தலைப்புச்செய்திகள்