Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வணிக ரீதியான செயற்கை கோள்கள்: இஸ்ரோவுக்கு ரூ.6,289 கோடி வருமானம்

ஜுலை 25, 2019 05:59

புதுடெல்லி: இஸ்ரோவின் வணிக பிரிவான ஆண்ட்ரிக்ஸ் கார்பரேஷன் நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளில் வணிக ரீதியாக 239 செயற்கை கோள்களை அனுப்பி உள்ளது. இதன் மூலம் ரூ.6,289 கோடி வருமானம் ஈட்டப்பட்டு உள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) நாட்டின் பல்வேறு தேவைகளுக்காக நவீன செயற்கைகோள்களை விண்ணில் அனுப்பி வருகிறது. விண்வெளி ஆராய்ச்சியில் சாதனை படைத்து வரும் இஸ்ரோ, தனியார் செயற்கை கோள்கள் மற்றும் வெளிநாட்டு செயற்கை கோள்களையும் விண்ணுக்கு அனுப்பி வைக்கிறது.

இந்த வணிக ரீதியான பணிகளை மேற்கொள்வதற்காக ‘ஆண்ட்ரிக்ஸ் கார்பரேஷன்’ எனப்படும் தனிப்பிரிவு ஒன்றை இஸ்ரோ செயல்படுத்தி வருகிறது. வணிக ரீதியில் செயற்கை கோள் அனுப்பும் நடவடிக்கைகளுக்கு பெரும் தொகையும் பெறப்படுகிறது. இந்த நடவடிக்கைகள் குறித்த கேள்வி ஒன்றுக்கு நாடாளுமன்ற மக்களவையில் நேற்று பிரதமர் அலுவலக இணை மந்திரி ஜிதேந்திர சிங் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆண்ட்ரிக்ஸ் கார்பரேஷன் நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளில் 239 செயற்கை கோள்களை வணிக ரீதியாக விண்ணில் செலுத்தி உள்ளது. இதன் மூலம் இஸ்ரோவுக்கு மொத்தம் ரூ.6,289.05 கோடி வருமானம் கிடைத்து உள்ளது.

இஸ்ரோவின் ஆய்வு மற்றும் மேம்பாட்டு பணிகளை வணிக ரீதியாக பயன்படுத்துவதற்காக கடந்த மார்ச் 6-ந் தேதி ‘நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட்’ (என்.எஸ்.ஐ.எல்.) என்ற நிறுவனம் தொடங்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் இந்திய விண்வெளி திட்டத்தின் தேவைகளை சந்திக்கவும், சர்வதேச விண்வெளி சந்தையை வணிக ரீதியாக பயன்படுத்திக்கொள்ளவும் இந்த நிறுவனம் அமைக்கப்பட்டு உள்ளது. என்.எஸ்.ஐ.எல். நிறுவனம் விண்வெளி ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும். 

இவ்வாறு ஜிதேந்திர சிங் கூறினார்.

தலைப்புச்செய்திகள்